2017-02-15 15:50:00

அப்பம் பலுகச்செய்த புதுமையின் நினைவுக் கோவில் புதுப்பிப்பு


பிப்.15,2017. அந்நியரை ஒதுக்கி, தேசிய உணர்வுகளை வளர்க்கும் இன்றையச் சூழலில், நற்செய்தியின் அடிப்படையில், ஒப்புரவை உருவாக்கும் வாழ்வு நமக்குத் தேவை என்று, ஜெர்மன் நாட்டு, கொலோன் (Cologne) பேராயர், கர்தினால், Rainer Woelki அவர்கள், புனித பூமியில் ஆற்றிய ஒரு திருப்பலியில் கூறினார்.

இயேசு அப்பங்களைப் பலுகச்செய்த புதுமையின் நினைவாக, புனித பூமியின் Tabgha எனுமிடத்தில் அமைந்துள்ள கோவிலை, 2015ம் ஆண்டு, ஜூன் 18ம் தேதி, வன்முறை குழுவொன்று தீக்கிரையாக்கியது.

இக்கோவிலைப் புதுப்பிக்கும் பணிகள் நிறைவேறியதையொட்டி, கடந்த ஞாயிறன்று அங்கு திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Woelki அவர்கள், தன் மறையுரையில், ஒப்புரவு குறித்து பேசினார்.

யூத அடிப்படைவாதத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் தீ வைக்கப்பட்ட இந்தக் கோவிலை புதுப்பிக்கும் பணிகளில், புனித பூமியில் உதவிகள் செய்துவரும் ஜெர்மன் நாட்டுக் குழுவொன்று ஈடுபட்டது.

இக்குழுவின் தலைவரான, கொலோன் பேராயர், கர்தினால் Woelki அவர்கள், நமது செயல்பாடுகள் இளையோரிடையே வெறுப்பை வளர்ப்பதற்குப் பதில், ஒப்புரவையும், ஒன்றிப்பையும் வளர்க்கவேண்டும் என்று, தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலின் அர்ச்சிப்பு திருப்பலியில், இஸ்ரேல் அரசுத்தலைவர், Reuven Rivlin, இஸ்ரேல் நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர், Giuseppe Lazzarotto, கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறை பேராயர் Georges Bacouni, மற்றும் ஏனைய இஸ்லாமிய, யூத மதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.