2017-02-14 14:44:00

பாசமுள்ள பார்வையில்... அன்னை என்ற அற்புதப் படைப்பு


"கடவுள் அன்னையரைப் படைத்தபோது" (When God Created Mothers) என்ற தலைப்பில், எழுத்தாளர்,  Erma Bombeck அவர்கள் எழுதிய அழகிய வரிகள் இதோ:

நன்மையே உருவான ஆண்டவன், அன்னையரை படைத்தபோது, ஆறு நாள்களாக ஓய்வின்றி உழைத்ததைப் பார்த்த வானதூதர், "இந்த படைப்பை உருவாக்க அதிகமாகவே உழைக்கிறீர்கள்" என்று சொன்னார்.

"இந்தப் படைப்பிற்கென நான் வகுத்துள்ள குறிப்புக்களைப் பார்த்தாயா?" என்று கேட்ட இறைவன், தானே விளக்கம் அளித்தார்: "இந்தப் படைப்பிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் தேவை. ஒவ்வொன்றும் தேய்ந்தாலோ, உடைந்தாலோ, அவற்றை மீண்டும் தானே உருவாக்கிக் கொள்ளவேண்டும். மீதமிருக்கும் உணவில், தன் பசியைப் போக்கிக்கொள்ளவேண்டும். காயப்பட்ட காலிலிருந்து, காதல் தோல்வியால் உடைந்துபோன உள்ளம் வரை, அனைத்தையும், ஒரு முத்தத்தால் குணமாக்கவேண்டும். ஆறு கரங்கள் கொண்டிருக்கவேண்டும்" என்று தன் படைப்பின் விவரங்களை விளக்கினார், இறைவன்.

"ஆறு கரங்களா?" என்று வியந்த வானதூதரிடம், "அது அவ்வளவு கடினமல்ல, இந்த படைப்புக்கு, மூன்று ஜோடி கண்களும் இருக்கவேண்டும்" என்று கூறினார், இறைவன். "மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் தன் குழந்தைகள் செய்வதைக் காணக்கூடிய ஒரு ஜோடி கண்கள்; நேரில் கண்டதையும், காணாததுபோல் நடந்துகொள்ளத் தெரிந்த ஒரு ஜோடி கண்கள்; தவறு செய்த குழந்தையிடம், 'நடந்தது போகட்டும், என் அன்பு எப்போதும் உனக்குண்டு' என்று தன் பார்வையாலேயே சொல்லக்கூடிய ஒரு ஜோடி கண்கள் என்று, மூன்று ஜோடிக் கண்கள் வேண்டும்" என்று விளக்கம் தந்தார், இறைவன்.

"இந்தப் படைப்பு, பார்ப்பதற்கு மிக மென்மையாக உள்ளதே" என்று கூறிய வானதூதரிடம், "இந்த மென்மைக்குள், அனைத்தையும் தாங்கும் உறுதி உள்ளது" என்று ஆண்டவன் பதில் தந்தார்.

படைப்பின் அருகே சென்று, கன்னங்களைத் தடவிப் பார்த்த வானதூதர், "இந்தப் படைப்பின் கண்களில் நீர்க்கசிவு உள்ளதே" என்று சுட்டிக்காட்டினார்.

"அது நீர்க்கசிவு இல்லை. கண்ணீர்" என்று சொன்ன இறைவன், "மகிழ்வு, துக்கம், வெற்றி, தோல்வி, தனிமை, இனிமை, என்ற அனைத்துச் சூழல்களிலும், கண்ணீர் வெளியாகும். இதை, நான் படைக்கவில்லை, தானாகவே அது உருவானது" என்று விளக்கமும் தந்தார்.

இவ்வாறு, இறைவன், அன்னையரை படைத்து முடித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.