2017-02-13 16:15:00

பொறாமை எனும் குணம், சகோதரத்துவ பிணைப்பை ஒழித்துவிடும்


பிப்.,13,2017. சகோதர பிணைப்பின் முக்கியத்துவம் குறித்தும், பொறாமை எனும் குணத்தால் அந்த பிணைப்பு அறுந்துபோவதுடன், குடும்பங்களும் அழிவுக்குள்ளாகும் என்பது குறித்தும், இத்திங்கள் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையின் தலைவராக இருந்து, தற்போது ஆசியாவில் தன் பணிகளைத் தொடரச் செல்லும் அருள்பணி Adolfo Nicolas அவர்களுக்கு இத்திங்கள் திருப்பலியை ஒப்புக்கொடுப்பதாக உரைத்து, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலியைத் துவக்கி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள் முதல் வாசகம் எடுத்துரைத்த காயின்-ஆபேல் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொன்டார்.

காயினிடம் எழுந்த பொறாமை எனும் சிறு தூசு, அவன் கண்களையே மறைக்கும்படியாக பெரிதாக வளர்ந்து, சகோதரத்துவம் எனும் பிணைப்பையே அழித்து விட்டது என்று கூறியத் திருத்தந்தை,  இத்தகைய பகைமை உணர்வுகள், துவக்கத்திலேயே கிள்ளியெறியப்படவேண்டும், இல்லையெனில் அவை சகோதரத்துவத்தை மட்டுமல்ல, குடும்பங்களையே அழித்துவிடும் என்றார்.

மனிதர்கள் சகோதரர்களாக அல்ல, மாறாக, பொருட்களாக நடத்தப்படும் இன்றைய உலகில், சகோதரப் பிணைப்பைவிட ஒரு துண்டு நிலத்தின் முக்கியத்துவம் அதிகமானதாக இருக்கிறது என்ற கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.