2017-02-11 15:33:00

மன்னிப்பின்றி, உண்மையான நீதி இல்லை, பேராயர் யூர்க்கோவிச்


பிப்.11,2017. அமைதி, நீதி, மன்னிப்பு ஆகிய மூன்றும் ஒன்றையென்று சார்ந்திருக்கின்றன, நீதியின்றி அமைதியில்லை, மன்னிப்பின்றி, உண்மையான நீதி இல்லை என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், உலகக் கூட்டமொன்றில் கூறினார்.

மதம், அமைதியைக் கட்டியெழுப்புதல், முன்னேற்றம் என்ற தலைப்பில், ஜெனீவாவில் நடைபெற்ற, உலக பல்சமய நல்லிணக்க வாரக் கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யூர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், இவ்வாறு கூறினார்.

மதங்களுக்குள் இடம்பெறும் உரையாடல், சகோதரத்துவ நட்புக்கும், பல்சமயத்தவரின் நல்லிணக்கத்திற்கும் பாலமாக அமைந்துள்ளது என்றும், ஆயுத மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள தோல்விகள், மதங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு புதிய முயற்சிகள் அவசியம் என்பதைக் காட்டுகின்றன என்றும் கூறினார், பேராயர் யூர்க்கோவிச்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, அணு ஆயுதங்கள், தவிர்க்க முடியாத கருவிகள் என்ற எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும், அமைதியின் திருப்பயணிகள் என்ற விதத்தில், இத்தகைய சிந்தனைகளுக்கு பல்சமயத்தவர் சவாலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார், பேராயர் யூர்க்கோவிச்.

அமைதியும், நீதியும் நம் இதயங்களிலும் மனங்களிலும் மறைந்து கிடக்கின்றன என்றுரைத்த, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், கடவுளின் பெயரில், அப்பாவி மக்களைக் கொலை செய்பவர்கள் உண்மையான மதத்தவர் கிடையாது, மாறாக, இவர்கள், தங்களின் உள்நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துகின்றவர்கள் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் குறிப்பிட்டார்.

உலக பல்சமய நல்லிணக்க வாரம், 2011ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.