2017-02-11 15:16:00

கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை மரியாவில் பார்க்க..


பிப்.11,2017. “ஒவ்வொரு மனிதர்மீதும் கடவுள் வைத்திருக்கும் உறுதியான அன்பின் அடையாளம், நோயுற்றவரின் நலமான மரியாவில் இருப்பதைப் பார்ப்பதற்கு, உங்கள் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறேன்”என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

லூர்து அன்னை விழா மற்றும், 25வது உலக நோயாளர் தினமான, பிப்ரவரி 11, இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டரில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை, அன்னை மரியாவில், பார்க்குமாறு கூறியுள்ளார்.

மேலும், போஸ்னியா-எர்செகொவினா குடியரசிலுள்ள மெஜ்ஜூகோரே (Medjugorje) அன்னை மரியா திருத்தலத்தில், திருப்பீடத்தின் சிறப்புப் பிரதிநிதியாக, மேய்ப்புப்பணியை மேற்கொள்ளுமாறு, போலந்து நாட்டு பேராயர் Henryk Hoser அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Warszawa-Praga மறைமாவட்ட ஆயரான, பேராயர் Henryk Hoser அவர்கள், மெஜ்ஜூகோரே அன்னை மரியா திருத்தலத்தில், வருகிற கோடை காலத்தில் தனது மேய்ப்புப்பணியை தொடங்குவார் என திருப்பீடம் அறிவித்துள்ளது. இத்திருத்தலத்திற்குத் திருப்பயணிகளாக வருகைதரும் விசுவாசிகளின் மேய்ப்புப்பணி தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பது குறித்து ஆராயும் நோக்கத்தில்,  பேராயர் Hoser அவர்களின் மேய்ப்புப்பணி நடைபெறும் என, திருப்பீடம் மேலும் அறிவித்துள்ளது.

போஸ்னியா-எர்செகொவினா குடியரசிலுள்ள, மெஜ்ஜூகோரே நகரில், 1981ம் ஆண்டில், அன்னை மரியா ஆறு சிறாருக்குக் காட்சியளித்தார் என நம்பப்படுகிறது. 1981ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, 4 வயது Mirjana Dragicevic, 5 வயது Ivanka Ivanković ஆகிய இரு சிறாரும், Crnica என்ற குன்றில், அன்னை மரியாவை முதலில் காட்சியில் கண்டனர். அதற்கு அடுத்த நாள், 6 வயது Marija Pavlović, 7 வயது Jakov Colo, 8 வயது Vicka Ivanković, 9 வயது Ivan Dragicevic. ஆகிய மேலும் நான்கு சிறார், அன்னை மரியாவைக் காட்சியில் கண்டனர். இக்காட்சிகள் தொடர்ந்தன எனச் சொல்லப்படுகிறது. ஏராளமான விசுவாசிகளும் மெஜ்ஜூகோரேவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மெஜ்ஜூகோரே அன்னை மரியா, அமைதியின் அரசி எனவும் அழைக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.