2017-02-10 15:13:00

நோயுற்றோர், திருஅவையின் விலைமதிப்பற்ற உறுப்பினர்கள்


பிப்.10,2017. நோய்களைக் குணமாக்குவதில் காணப்படும் அறிவியல் ஆய்வுகள் வியத்தகு வகையில் உள்ளவேளை, அரிதான மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கும், இதே மாதிரியான அக்கறை காட்டப்பட வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் நலவாழ்வு பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவு மற்றும், 25வது உலக நோயாளர் தினத்தை முன்னிட்டு, இத்தாலிய மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுக்களின் இயக்குனர்கள், உடன் உழைப்பாளர்கள் என முன்னூறு பேரை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும் முன்னேற்றங்களுக்கு, நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று கூறினார்.

ஏராளமான நோயுற்றோர் மற்றும், தனியாக வாழும் வயதானவர்கள், குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போரின் மனித மாண்பைக் காக்கவும், அவர்களின் துயர் துடைக்கவும் உழைத்துவரும், எண்ணற்ற தன்னார்வப் பணியாளர்களுக்கு, தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வயது முதிர்ந்த நோயுற்றவர், குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்ட நோயுற்றோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, கருவறை முதல், இயற்கையான மரணம் அடையும்வரை, மனிதர், வாழ்வதற்கு இருக்கும் இன்றியமையாத உரிமைகள் காக்கப்படுமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு, மறைமாவட்டங்கள், கிறிஸ்தவ சமூகங்கள், துறவற சபைகள், குடும்பங்கள் ஆகியவை, நோயுற்றோர் மீது மேய்ப்புப்பணி அக்கறை காட்ட வேண்டுமென்ற நோக்கத்தோடு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார் என்பதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயுற்றோர், திருஅவையின் விலைமதிப்பற்ற உறுப்பினர் என்றும், நோயுற்றோர், துன்புறும் கிறிஸ்துவில், ஆறுதலை அடைவார்களாக என்றும், இத்தாலிய மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுக்களின் சந்திப்பில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.