2017-02-10 15:29:00

உலகில், பெருகிக் கிடக்கும் நல்லவைகளை மறக்காதீர்கள்


பிப்.10,2017. “நோயுற்ற நம் சகோதர சகோதரிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களுடன் நெருக்கமாக இருப்போம்”என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

லூர்து அன்னை விழாவாகிய பிப்ரவரி 11, இச்சனிக்கிழமையன்று, 25வது உலக நோயாளர் தினம் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இத்தினத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 17ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, Roma Tre பல்கலைக்கழகத்தைப் பார்வையிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல், 12 மணி வரை, திருத்தந்தை அங்குச் செலவிடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்னும், La Stampa என்ற இத்தாலிய தினத்தாள் ஆரம்பிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவுக்கு, இவ்வியாழனன்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கால உலகின் நிலைமைகளை வழங்கும் அதேவேளை, இவ்வுலகில், பெருங்கடலாக பெருகிக் கிடக்கும் நல்லவைகளையும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதயங்கள் கடினப்படுத்தப்படுவது குறித்து எச்சரித்துள்ள திருத்தந்தை, நாம் ஒருவர் ஒருவர் மீது அக்கறையாய் இருப்பதன் வழியாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்வை, ஒருவர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

ஆயுத மோதல்கள், வன்முறை, காழ்ப்புணர்வு, பயங்கரவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகில், ஒருவரின் நம்பிக்கை திருடப்பட்டுவிடாமல் இருப்பதில், கவனம் செலுத்துமாறும், ஊடகத் துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

1867ம் ஆண்டு தூரின் நகரில் La Stampa தினத்தாள் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.