2017-02-10 15:56:00

ஆயர்கள் : மேய்ப்புப்பணியில் குடும்ப வாழ்வுக்கு முன்னுரிமை


பிப்.10,2017. திருஅவை மற்றும் குடும்பங்களின் உறவுகளிலிருந்து பிரிந்து வாழும் மக்களுக்கு,  மேய்ப்புப்பணியில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு, இந்திய ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 29வது நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில், அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், திருமண உறவு முறிந்த நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு, மேய்ப்புப்பணியில், உடனடியாக அக்கறை காட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நம் குடும்பங்களில் அன்பின் மகிழ்வை ஊக்குவித்தல் என்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலின் (Amoris Laetitia) அடிப்படையில்,  கத்தோலிக்கக் குடும்பங்கள் உயிரூட்டம் பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்த ஆயர்கள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விவகாரங்களில், கத்தோலிக்கப் போதனைகளிலிருந்து, குடும்பங்கள் விலகிச் செல்கின்றன என்றும் கூறியுள்ளனர்.

கடும் வறுமையில் வாழும் குடும்பங்கள், இரு வேறு மதங்களைச் சேர்ந்த தம்பதியர், பெற்றோரில் ஒருவரை மட்டும் கொண்டுள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் உள்ள குடும்பங்கள், துன்புறும் குடும்பங்கள், குடியேற்றதாரர், நோயாளர், மற்றும், வயது முதிர்ந்தவர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு, திருஅவையின் ஆதரவு மிகவும் தேவைப்படுகின்றது என்றும், ஆயர்கள் தெரிவித்துள்ளனர். 

குடும்ப மேய்ப்புப்பணிக்கு, அருள்பணியாளர்கள், வேதியர்கள் மற்றும் மேயப்புப்பணியாளர்களை நன்கு தயாரிக்க வேண்டுமென்றும் கூறியுள்ள ஆயர்கள், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற, முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் போதுமான நலவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளின்றி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள ஏறக்குறைய 2 கோடியே 80 இலட்சம் கிறிஸ்தவர்களில், ஒரு கோடியே 50 இலட்சம் பேர், அதாவது 55 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.  

CCBI என்ற, இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவை, போபாலில் சனவரி 31ம் தேதியிலிருந்து, பிப்ரவரி 8, இப்புதன் வரை நடத்திய 29வது நிறையமர்வு கூட்டத்தில், 139 மறைமாவட்டங்களிலிருந்து 136 ஆயர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.