2017-02-09 16:30:00

இளையோரிடையே நம்பிக்கையை வளர்க்கும் கல்வி - திருத்தந்தை


பிப்.09,2017. தனி மனிதரின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தும் இன்றைய கலாச்சாரம், மனிதர்களை தனிப்பட்ட முறையிலும், கலாச்சார வழியிலும் வறுமைப்படுத்துகின்றது என்றும், இதற்கு ஒரு தகுந்த மருத்துவம், கல்வியே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த கல்வியாளர்களிடம் கூறினார்.

கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள பன்னாட்டுப் பிரதிநிதிகள் 80 பேரை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கப் பள்ளிகளும், கல்லூரிகளும் நமது கலாச்சாரத்தை, நற்செய்தியின்படி வழிநடத்திச் செல்லும் சிறந்த கருவிகள் என்று கூறினார்.

மாணவ, மாணவியர், சுயநலத்தைக் கடந்து, சமுதாயக் கண்ணோட்டத்தை வளர்க்கும் நற்செய்தி விழுமியங்களை தங்கள் வாழ்வில் பின்பற்றும் வழிகளைச் சொல்லித்தரும் கடமையை, நமது பள்ளிகளும், கல்லூரிகளும் பெற்றுள்ளன என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

நமது கல்விக்கூடங்கள், உரையாடல் மற்றும் சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் தலங்களாக விளங்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இத்தகையக் கலாச்சாரம் ஒருவர் ஒருவர் மீது கொள்ளும் உண்மையான மதிப்பின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதையும் நாம் சொல்லித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உண்மையைக் கண்டுபிடிக்க, திறந்த மனதுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களே சிறந்த வழி என்பதையும், உறவுப் பாலங்கள் அமைப்பதையும் நம் இளையோர் உணர்வதற்கு கத்தோலிக்கக் கல்வி வழிவகுக்க வேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

இன்றைய கல்வி, இளையோர் மனங்களில் நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்றும், வாழ்வை ஆதரிக்கும் அனைத்து வழிகளையும் நம் இளையோர் ஆர்வமுடன் பின்பற்றவேண்டும் என்றும் திருத்தந்தை கத்தோலிக்க கல்வியாளர்களிடம் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.