2017-02-09 16:25:00

இந்தியாவில் அடிப்படைவாதமே பெரும் ஆபத்து -பேராயர் அந்தோனிசாமி


பிப்.09,2017. மதசார்பற்ற நாடு என்று அழைக்கப்படும் இந்தியாவுக்கு, அடிப்படைவாதமே பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று, பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கூறினார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில், திருப்பலி நிறைவேற்றிய சென்னை, மயிலைப் பேராயர் அந்தோனிசாமி அவர்கள், பிறரைக் கண்டனம் செய்வோரைக் குறித்து நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.

இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராயர் அந்தோனிசாமி அவர்கள், மக்களைக் கண்டனம் செய்வதற்கல்ல, மாறாக, அவர்களைக் குணமாக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று ஆயர்களிடம் எடுத்துரைத்தார்.

'என் கடவுள், நான் காணும் பொருள்களில் இல்லை; மாறாக, பொருள்களைக் காணக்கூடிய என் விழிகளில் கடவுள் இருக்கிறார்' என்று பக்தர் ஒருவர் கூறியதை, தன் மறையுரையில் நினைவுகூர்ந்த பேராயர் அந்தோனிசாமி அவர்கள், நாம் காண்பதனைத்திலும், காணும் மனிதர் அனைவரிலும் இறைவனைக் காணும் கண்ணோட்டத்தை நாம் பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

சனவரி 31, கடந்த செவ்வாயன்று, மத்தியப்பிரதேசத்தின் போபால் நகரில் துவங்கிய இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் 29வது நிறையமர்வுக் கூட்டம், பிப்ரவரி 8, இப்புதனன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.