2017-02-08 16:17:00

"மனித வர்த்தகரின் மனமாற்றத்திற்காக செபிப்போம்" - திருத்தந்தை


பிப்.08,2017. "மனிதர்களை வர்த்தகம் செய்வோர், இறுதியில் இறைவனுக்குக் கணக்கு கொடுக்கவேண்டும். அவர்களது மனமாற்றத்திற்காக செபிப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 8, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

சூடான் நாட்டிலிருந்து அடிமையாக விற்கப்பட்டு, இறுதியில், இத்தாலி நாட்டில் கனோசியன் துறவு சபையில் இணைந்த புனித ஜோசப்பீனா பக்கீட்டா அவர்களின் திருநாள், கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படும் நாளான, பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு மற்றும் செப நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

கடந்த மூன்றாண்டுகளாகச் சிறப்பிக்கப்பட்டு வரும் இந்த உலக நாளையொட்டி, திருத்தந்தை அவர்கள் இத்திங்கள், மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், மனித வர்த்தகத்தை மையப்படுத்தி அமைந்துள்ளன.

“அடிமைப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற சிறாரின் அழுகுரலைக் கேட்போம். அவர்களின் துன்பங்களைக் கண்டு, எவரும் அக்கறையற்றவர்களாக இருக்கக்கூடாது” என்ற செய்தியையும், "வாழும் இறைவனின் சாயல், இத்தனை கொடுமையாக நடத்தப்படுவதை நாம் சகித்துக்கொண்டிருக்க முடியாது" என்ற செய்தியையும், திருத்தந்தை தன் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிட்டார்.

அதற்கு முன்னர், "இன்றைய உலகின் திறந்ததொரு காயமாக, கிறிஸ்துவின் உடலில் விழும் சாட்டையடியாக, மனித வர்த்தகம் அமைத்துள்ளது" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.