2017-02-08 15:42:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 3


பிப்.08,2017.  உரோமைப் பேரரசு என்பது, அக்காலத்தில், மேற்கத்திய கலாச்சாரத்தில், அரசியல் மற்றும், சமூகக் கட்டமைப்பில் மிகவும் பரந்து விரிந்த ஒரு மாபெரும் பேரரசாகும். கி.மு.27ம் ஆண்டில், தொடங்கிய இப்பேரரசு, ஏறக்குறைய 1,500 ஆண்டுகள் இவ்வுலகை ஆட்சி செய்தது. அகுஸ்துஸ் சீசரை முதல் பேரரசராகக்  கொண்டு இயங்க ஆரம்பித்த இந்தப் பேரரசின்கீழ், ஐரோப்பா, மத்தியதரைக் கடல் பகுதி, பிரித்தானியா, இஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜெர்மனி எகிப்து என, பல்வேறு பகுதிகள் இருந்தன. கி.பி.1453ம் ஆண்டில், ஒட்டமான் துருக்கியர்கள், கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய பின், இந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மிகவும் வல்லமை படைத்திருந்த இந்த உரோமைப் பேரரசின் பல நகரங்களில், நூறு ஆண்டுகளுக்குள், கிறிஸ்தவ சமூகம், பரவிய விதம், மனித வரலாற்று ஏட்டில், உண்மையிலேயே, ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம் என்றே வியந்து பேசப்படுகின்றது. இயேசுவின் முதல் திருத்தூதர்கள் யூதர்கள் என்பதால், முதலில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களும் யூதர்களாகவே இருந்தனர். இவ்வாறு மாறிய முதல் கிறிஸ்தவ சமூகம், செபத்திலும், தங்கள் உடைமைகளைப் பொதுவில் வைத்து, அனைத்தையும் பகிர்ந்து வாழ்ந்தனர். யூத மறைநூல் அறிஞர்களால் இந்தச் சமூகத்தைத் தடை செய்ய முடியவில்லை. ஏனென்றால், இச்சமூகத்தின் பக்தியும், யூத மரபுக்கு இது விசுவாசமாக இருந்ததும் எல்லாரையும் ஈர்த்தது. ஆயினும், யூதமதத் தலைவர்கள், திருத்தூதர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து, இயேசுவைப் பற்றிப் போதிக்கக் கூடாது என அச்சுறுத்தி அனுப்பினர். இருந்தபோதிலும், தாங்கள் கண்ணால் கண்டதையும், கேட்டதையும் அறிவிக்காமல் எப்படி இருக்க முடியும் என, இயேசுவின் திருத்தூதர்கள் சவால் விட்டு, தங்கள் போதனைகளைத் தொடர்ந்தனர்.

எருசலேமில் பரவிய கிறிஸ்துவின் திருஅவையை, சிறிது சிறிதாக பிற பகுதிகளுக்கும் திருத்தூதர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து வெளியேறி, மத்திய தரைக்கடல் பகுதியில் பரவியிருந்த யூதர்களுக்கும் கிறிஸ்துவை அறிவிக்கச் சென்றனர். “கிறிஸ்துவின் உடலை ஒரு சிறு கூடையிலும், அவரின் இரத்தத்தை ஒரு கண்ணாடிக் குப்பியிலும் கொண்டு செல்கிறவரைவிட, செல்வந்தர் யார்?” என, புனித ஜெரோம் எழுதியுள்ளது போன்று, திருத்தூதர்களும், பல நாடுகளுக்கும் சென்று, கிறிஸ்துவை துணிச்சலுடன் போதித்தனர். பர்த்தலமேயு அர்மேனியாவிலும், தோமா, பார்த்தியா, பெர்சியா பின் இந்தியாவிலும், மத்தேயு எத்தியோப்பியாவிலும், அல்பேயுவின் மகன் யாக்கோபு எகிப்திலும், தீவிரவாதி எனப்பட்ட சீமோன், அசீரியா மற்றும் பெர்சியாவிலும்,  நற்செய்தியை அறிவித்தனர். புறஇனத்தாரின் திருத்தூதராகிய பவுல், ஆசிய மைனர், அதாவது தற்போதைய துருக்கி, மாசிடோனியா, கிரேக்கம், மால்ட்டா, உரோம், மேற்கு இஸ்பெயின் ஆகிய இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். இன்னும், பன்னிரு திருத்தூதர் குழுவில் இல்லாத பர்னபாஸ் சைப்ரசிலும், மாற்கு, அலெக்சாண்டிரியாவிலும் நற்செய்தியை அறிவித்தனர் என, மரபு வழியாகச் சொல்லப்படுகின்றது. இயேசுவின் உயிர்ப்பை, பேதுருவுடன் பார்த்தவர்களில் ஒருவராகிய யோவானின் சகோதரரரும், செபதேயுவின் மகனுமான யாகோப்புவை, கி.பி.44ல், மன்னன் ஏரோது அக்ரிப்பா, வெட்டிக் கொலை செய்தான். இவ்வாறு இவர், திருத்தூதர்களில் முதல் மறைசாட்சியானார்.

இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவரான பிலிப்பு அதிகம் அறியப்படாதவர். யோவான் நற்செய்தியில் மட்டுமே இவரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அந்திரேயா, தன் சகோதரர் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். ஆனால், பிலிப்புவை இயேசுவே, என்னைப் பின்தொடர்ந்து வா (யோவா.1:43) என அழைத்தார். பொதுவாக, இறைவன் மக்கள் வழியாக, மக்களைச் சென்றடைகிறார். ஆனால், இங்கு அதற்கு விதிவிலக்காக, பிலிப்புவை அவரே அழைத்திருக்கிறார். பிலிப்பு, நத்தனியேலை (பர்த்தலமேயு) இயேசுவிடம் அழைத்துச் சென்றார். மேலும், இயேசு திபேரியக் கடல் பகுதியில், பெரும் திரளான மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்த போது, அவர்களுக்கு உணவளிக்க விரும்பினார். இயேசு அங்கு பிலிப்புவிடம், “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? (யோவா. 6:5)” என்று கேட்டார். இன்னும், இயேசு, இறுதி இரவு உணவில் தம் திருத்தூதர்களுக்கு உரையாற்றியபோது, பிலிப்பு இயேசுவிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும் என்றார். இயேசு அவரிடம், பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும் (யோவா.14, 8-9)".  இவ்வாறு நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தூதர் பிலிப்பு, பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவர்.

வளர்ந்துவரும் கிறிஸ்தவ சமூகத்தைக் கவனித்துக் கொள்வதற்காகவும், கைம்பெண்கள் மற்றும், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கென, திருத்தூதர்கள் நியமித்த ஏழு பேரில் (திரு.பணி 6:1-6)திருத்தூதர் பிலிப்பும் ஒருவர். இவர் சமாரியா சென்று நற்செய்தியைப் போதித்து, பல அரும்செயல்களை(திரு.பணி 8:4-6) ஆற்றினார். சீமோன் என்ற மாயவித்தைக்காரனை இவர் மனம் மாற்றினார் (திரு.பணி.8:9-13) எத்தியோப்பியாவிலிருந்து காசாவுக்குச் சென்ற எத்தியோப்பிய நிதியமைச்சருக்குத் திருமுழுக்கு அளித்தார். மூன்றாம் பாலினத்தவரான இவர், எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர் (திரு.பணி. 8:26-39). தூய ஆவியாரின் தூண்டுதலால் பிலிப்பு அந்த அமைச்சரிடம் சென்றார். பின்னர் பிலிப்பு, செசாரியாவில் வாழ்ந்தார் (திரு.பணி 21:8) இவருக்கு திருமணமாகா நான்கு பெண் மக்கள் இருந்தனர். அவர்களும் இறைவாக்குரைத்து வந்தார்கள் (திரு.பணி 21:9) என்று, திருத்தூதர்கள் பணி நூல் சொல்கிறது. திருத்தூதர் பிலிப்பு எவ்வாறு மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்பதை அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம். திருத்தூதர்கள் வரலாறு தொடர்கின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.