2017-02-08 17:11:00

இந்திய கர்தினால்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு


பிப்.08,2017. இந்திய ஆயர் பேரவையின் உயர் பொறுப்பாளர்களாக பணியாற்றும், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மற்றும் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இப்புதனன்று சந்தித்தனர் என்று, இந்திய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் கிளீமிஸ் அவர்களின் தலைமையில், இப்பேரவையின் பொறுப்பாளர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து, ஏமன் நாட்டில் கடத்தப்பட்டுள்ள அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்கென அரசு தீவிர முயற்சிகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.

அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலையை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு எடுத்துவருவதாக, பிரதமர் மோடி இச்சந்திப்பில் கூறினார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கும் மனநிலை, அரசிடம் உள்ளது என்றும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு, தேவையான அனைத்து பாதுகாப்பையும் அரசு வழங்கும் என்றும், பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்தார் என்று, இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.