2017-02-07 15:36:00

இந்திய நகரச் சிறாருக்கு வலைத்தளம் பாதுகாப்பாக இல்லை


பிப்.07,2017. இந்தியாவின் நகரங்களில் வாழும் சிறாரில், இரண்டு பேருக்கு ஒருவர் வீதம், வலைத்தளம் பாதுகாப்பாக இல்லையென உணர்வதாகவும், ஏறக்குறைய 16 விழுக்காட்டுச் சிறார், தங்களுக்குத் தொடர்பில்லாத செய்திகளை, வலைத்தளத்தில் பெறுவதாகவும் கூறியுள்ளனர்.

சிறாரின் இணையதளம் மற்றும், அவர்களின் பாதுகாப்பு குறித்து, அயர்லாந்து நாட்டு 'WebWise' இணையதள பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகரங்களில் வாழும், பள்ளிக்குச் செல்லும் சிறாரில், ஏறக்குறைய 99 விழுக்காட்டினர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர் எனவும், இவர்களில் 25 விழுக்காட்டினரின் இணையதள விபரங்கள் திருடப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், மலேசியா, மியான்மார், பாகிஸ்தான், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் பிற ஆசிய நாடுகளில் முகநூலை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில் பதிலளித்த 320 பேரின் பதில்களிலிருந்து இது தெரியவந்துள்ளதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இன்னும், டில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுகேடு தொடர்பான நோய்கள் காரணமாக, ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 பேரும், ஒவ்வோர் ஆண்டும் மூவாயிரம் பேரும் பலியாவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வேதியப்பொருள்கள், இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.