2017-02-06 14:57:00

பாசமுள்ள பார்வையில்.. என் அன்னை எனக்கு ஒரு தேவதை


என் அன்னை சொன்ன எட்டுப் பொய்கள் என, ஓர் ஆப்ரிக்கர் (Reunion), இணையத்தில் இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

1. நான் குழந்தையாக இருந்தபோது எங்களுக்குப் போதுமான உணவு இல்லை. வீட்டில் சிறிதளவு உணவு இருந்தபோதெல்லாம், என் அன்னை, தனக்கிருந்த சிறிதளவு உணவையும், எனது உணவு தட்டில் போட்டு, "மகனே, எனக்குப் பசி இல்லை, இதையும் சாப்பிடு" என்று சொல்வார். 2. நான் வளர்ந்த பிறகு, எனக்குச் சத்துணவு கொடுக்க வேண்டுமென்பதற்காக, நேரம் கிடைத்தபோதெல்லாம், என் வீட்டிற்கு அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று மீன்பிடித்து வந்து சமைத்துக் கொடுப்பார் என் அன்னை. ஒரு சமயம் இரண்டு மீன்கள் பிடித்து வந்து சமைத்தார். ஒரு மீனை நான் சாப்பிட்டு முடித்த பின், அந்த மீனின் முள்ளில் ஒட்டிக்கொண்டிருந்த சதையை எடுத்துச் சாப்பிட்டார். இதைப் பார்த்த நான், இரண்டாவது மீனை அவர் தட்டில் வைத்தேன். ஆனால் என் அன்னையோ, எனக்கு உண்மையிலேயே மீன் பிடிக்காது மகனே. எனவே இதையும் நீ சாப்பிடு என்று கொடுத்தார். 3. என் படிப்பிற்கு உதவும் நோக்கத்தில், தீப்பெட்டி தொழிற்சாலை சென்று, காலிப் பெட்டிகளை வாங்கி வந்து, இரவில், மெழுகுதிரி வெளிச்சத்தில், தூங்காமல், தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கினார். அம்மா, நேரம் ஆகிறது, படுக்கச் செல்லுங்கள், நாளைக்குத் தொடர்ந்து செய்யலாம் என்று நான் சொன்னபோது, சிரித்துக்கொண்டே, மகனே, நீ தூங்கு, எனக்குக் களைப்பாக இல்லை என்று சொன்னார். 4. நான் எனது கடைசித் தேர்வுக்குப் படித்தபோதெல்லாம் அவர்களும் கண்விழித்தார்கள். தேர்வு எழுதிவிட்டு நான் வெளியே வந்தபோது, கொளுத்தும் வெயிலில் காத்திருந்து, எனக்குத் தேநீர் கொடுத்தார்கள். என் அன்னை வியர்வையால் நனைந்திருப்பதைப் பார்த்து, எனது தேநீர் கப்பைக் கொடுத்தபோது, எனக்குத் தாகமாக இல்லை மகனே, நீ குடி என்றார்கள். 5. என் தந்தை இறந்தபின், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எல்லாரும் என் அன்னையை மறுதிருமணம் செய்யச் சொன்னார்கள். ஆனால் என் அன்னையோ, எனக்கு அன்பு தேவையில்லை என்று சொல்லி, அதை மறுத்து விட்டார்கள். 6. நான் எனது படிப்பை முடித்து வேலைக்குச் சென்றேன். அப்போதும், என் அன்னை, ஒவ்வொரு நாள் காலையில் சந்தைக்குச் சென்று காய்கறிகள் விற்று வந்தார். நான் என் அன்னையின் செலவுக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்களோ, எனக்குப் போதுமான பணம் உள்ளது எனச் சொல்லி, அந்த பணத்தைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். 7. நான் பகுதிநேர வேலை செய்துகொண்டே முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தேன். எனது கல்விக்கு, ஓர் அமெரிக்க நிறுவனத்தின் உதவி கிடைத்து, அமெரிக்கா சென்றேன். எனது ஊதியமும் உயர்ந்தது. எனவே என் அன்னையை, அமெரிக்காவுக்கு அழைத்தேன் அதற்கு அவர்கள், இப்படி, உயர்தர வாழ்வில் எனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி, அமெரிக்கா வர மறுத்துவிட்டார்கள். 8. இறுதியில், என் அன்னை புற்றுநோயால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். நான் அவரை அமெரிக்காவிலிருந்து பார்க்கச் சென்றேன். படுக்கையிலிருந்த என் அன்னையின் உருவத்தைப் பார்த்ததும், கதறி அழுதேன். அப்போது என் அன்னை, அழாதே மகனே, எனக்கு வலி இல்லை என்றார்கள். இந்த எட்டாவது பொய்யைச் சொல்லிவிட்டு, என் அன்னை இறந்து விட்டார்கள்.

ஆம். என் அன்னை எனக்கு ஒரு தேவதை. இப்பூமியில், உங்கள் அன்னை இன்னும் உயிரோடு இருந்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இல்லையென்றாலும், மேலும் நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று, அந்த ஆப்ரிக்கர் பதிவு செய்திருக்கிறார். வாழ்க அன்னையர்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.