2017-02-04 15:46:00

நொபெல் அமைதி ஆர்வலர்களுக்கு திருத்தந்தை செய்தி


பிப்.04,2017. “நடவடிக்கை எடுங்கள்! வாழ்வை முழுமையாக வாழுங்கள்!  நீங்கள் வாழும் சான்று வாழ்வைப் பார்க்கும்போது, இவ்வாறு நீங்கள் ஏன் வாழ்கின்றீர்கள்? என்று மற்றவர்கள், உங்களைக் கேட்கலாம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், நொபெல் அமைதி ஆர்வலர்கள், மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளுதலையும், உரையாடலையும் ஊக்குவிக்க எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் மெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டாவில், மாநாடு நடத்திவரும்   நொபெல் அமைதி ஆர்வலர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில், அரசுக்கும், புரட்சிக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பது, மற்ற சமூகங்களுக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது உலக அமைதி தினச் செய்தியிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தீர்மானங்கள், நம் உறவுகள், நம் செயல்கள் மற்றும், அரசியல் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளில், வன்முறையற்ற தன்மை, முத்திரை பதிப்பதாய் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

அமைதியும், ஒப்புரவும் என்ற தலைப்பில், பொகோட்டாவில் நடைபெறும், நொபெல் அமைதி ஆர்வலர்களின் 16வது உலக உச்சி மாநாடு, பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.