2017-02-04 16:16:00

தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, மனித வளங்களில் முதலீடு


பிப்.04,2017. தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, மனித வளங்களில் முதலீடு செய்வது, முன்நிபந்தனையாக அமைந்துள்ளது என்று, இந்திய ஆயர் பேரவையின் சமூகநல அமைப்பான காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி பிரெட்ரிக் டி சூசா அவர்கள் கூறினார்.

இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், தாக்கல் செய்துள்ள 2017-18ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கை (பட்ஜெட்) குறித்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, அருள்பணி டி சூசா அவர்கள், சமுதாயத்தின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, பழங்குடியினர் மற்றும் நலிந்த மக்கள் மத்தியில், மேலும் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்

விவசாயிகளின் தற்கொலைகள், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றை நோக்கும்போது, வேளாண் துறைக்கு, ஐந்து விழுக்காடு நிதியை அதிகரித்திருப்பது போதுமானதாக இல்லை என, கத்தோலிக்கத் திருஅவை நம்புவதாகத் தெரிவித்தார், அருள்பணி டி சூசா.

தேசிய நலவாழ்வுப் பணிக்கு, ஒன்பது விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆயினும், மனநலம் மற்றும், புகையிலை கட்டுப்பாடுத் திட்டத்திற்கு, கடந்த ஆண்டைப் போலவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது என்றும், அருள்பணி டி சூசா அவர்கள் கூறினார்.

மொத்த பட்ஜெட்டில், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே, 2.44 விழுக்காடும், 1.49 விழுக்காடும் கடன் வழங்கப்பட்டுள்ளது, இவை போதுமானதாக இல்லையெனவும், இந்திய காரித்தாஸ் இயக்குனர் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.