2017-02-04 15:55:00

திருமணத்தின் தூய்மை மதிக்கப்பட வேண்டும், போபால் பேராயர்


பிப்.04,2017. திருமணப்பந்தம், மற்றும், அதன் தூய்மை மதிக்கப்பட வேண்டும் என, குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தார், போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

இந்தியாவின், போபாலில் நடைபெற்றுவரும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 29வது நிறையமர்வு கூட்டத்தின் நான்காவது நாளில் உரையாற்றிய, பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், தம்பதியர், திருமணத்தின் தூய்மையை மதித்து, தங்களின் திருமண அர்ப்பணத்திற்கு, வாழ்வு முழுவதும் பிரமாணிக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அச்சம், மன அமைதியையும், குடும்பத்தின் அமைதியையும் குலைத்து, குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகின்றது எனவும், தம்பதியர், தங்களின் கடமையைப் புறக்கணிக்கும்போது, பாதிக்கப்படுகின்றவர்கள் பிள்ளைகளே எனவும் கூறினார் பேராயர் லியோ கொர்னேலியோ.

மேலும், இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் குடும்பப் பணிக்குழு, android தொலைபேசிகளுக்கு, App தொடர்பு வசதியையும் இந்த நிறையமர்வு கூட்டத்தில், அறிமுகம் செய்தது.

மேலும், இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டிய அதேவேளை, பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து, விவாதத்திற்கு இடமே இல்லாமல், எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இக்கூட்டத்தில் கூறினார்.

இறைவார்த்தையை புதிய முறையில் அறிவிப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி, கோட்டாறு அருள்பணி சகாய பெலிக்ஸ், இன்னும், கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி கரோலின் மைக்கிள், திரு.ராஜேஷ் ஆகிய மூவரும், இக்கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டனர்.

இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 29வது நிறையமர்வு கூட்டம், பிப்ரவரி 8, வருகிற புதனன்று நிறைவடையும். 

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.