2017-02-03 14:52:00

பாசமுள்ள பார்வையில்...:அம்மாவில் இருந்து பிறந்த சொல் ‘அன்பு’


தமிழில், அம்மா என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியாது, ஆனால், அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பர். அந்த அன்பு தாய், நம்மை சிரிக்க வைப்பதற்காக, எத்தனை ஆயிரம் முறை, கண்ணீர்களை மறைத்திருப்பார், எண்ணிப்பாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஓய்வுபெறும் வயதென்று ஒன்று உண்டு, தாயைத்தவிர.

தன் மகவுக்காக மரண வலியையொத்த பிரசவ வலியை தாங்கிக்கொண்ட தாயால், தன் மகனின் கண்ணீர் வலியை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வார்த்தைகள் இன்றி உணர்வுகளில் உரையாடும் இரு தெய்வங்கள், அம்மாவும் குழந்தையும்.

நெஞ்சினில் ஈரத்தையும், கண்களில் கருணையையும், கைகளில் ஆதரவையும், சொல்லில் கனிவையும் என்றும் கொண்டிருப்பவர் தாய்.

முகத்தைப் பார்ப்பவர்களும், அகத்தைப் பார்ப்பவர்களும் உள்ள உலகில், வயிற்றைப் பார்ப்பவர்கள் அன்னையர் மட்டுமே.

ஒரு காலத்தில் கணவனுக்குத் தெரியாமல் மகனுக்கு பணம் கொடுத்த தாய்க்கு, மனைவிக்குத் தெரியாமல் பணம் கொடுக்கிறார்கள் மகன்கள் இன்று.

'அப்பா அடிப்பாருடா', 'அப்பாகிட்ட சொல்லிருவேண்டா', என்று பயமுறுத்தி, பயமுறுத்தியே, எல்லா அன்பையும் தங்களிடமே தக்கவைத்துக் கொள்பவர், அன்னையர்.

எத்தனை உறவுகள் இருந்தாலும், தன் தாயை இழக்கும்போதுதான், ஒருவன் அனாதையாகிறான்.

தாய் நமக்கு கொடுக்கும் சுதந்திரம், நம்பிக்கையின் பெயரில்;

கொடுக்க மறுக்கும் சுதந்திரமோ, அக்கறையின் மிகுதியால்.

முதியோர் இல்லத்தில் வாழும் ஒவ்வோர் அன்னையும் தினமும் செபிக்கும் செபம் என்னவென்றால், 'கட‌வுளே, என் குழந்தைக்கு ஒரு நாளும் இந்நிலை வரக்கூடாது' என்பதே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.