2017-02-02 15:39:00

மடகாஸ்கர் நாட்டில், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்


பிப்.02,2017. தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர் பெற்றெழுவதும், இரத்தப்போக்கு நோயுள்ள பெண் நலம் பெறுவதும், நம்பிக்கையினால் ஏற்பட்ட புதுமைகள் என்பதால், அவற்றை, நற்செய்தியாளர் மாற்கு ஒன்றாக இணைத்துள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், தன் மறையுரையில் கூறினார்.

மடகாஸ்கர் குடியரசும், திருப்பீடமும் தூதரக உறவுகளை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டில் மேற்கொண்ட 5 நாள் மேய்ப்புப்பணி பயணத்தை, சனவரி 31, இச்செவ்வாயன்று நிறைவு செய்தார்.

இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இச்செவ்வாயன்று, குழந்தை இயேசுவின் புனித தெரேசா அருள்பணியாளர் பயிற்சி மையத்தில் திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், சனவரி 31ம் தேதி வழங்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

இயேசுவை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அணுகிவந்த அனைவரும் நலம் பெறுவதை நற்செய்தி வழியாக அறிகிறோம் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இன்றைய உலகில் பல போலி மீட்பர்கள் உள்ளனர் என்றும், அவர்களை அணுகிச் செல்வோர், தங்கள் நலனை இன்னும் அதிகமாக இழக்கின்றனர் என்றும் கூறினார்.

தீட்டப்பட்டது, தீட்டுப்படாதது என்ற சட்டங்களை மதிக்காமல், தன்னை நாடி, நம்பிக்கையோடு வந்தால் போதும், நலம்பெற முடியும் என்பதை, இயேசுவின் இப்புதுமைகள் தெளிவாக்குகின்றன என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.