2017-02-02 14:29:00

பாசமுள்ள பார்வையில்.. தாழ்மையைக் கற்றுத் தரும் தாய்


ஆண்மகவைப் பெற்றெடுத்த ஒரு பெண், நாற்பது நாள்கள் வரை, ஆலயம் செல்லக் கூடாது. அதன் பின்னர், ஆலயம் சென்று, தன் தகுதிக்கேற்ப காணிக்கை செலுத்தி,  தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டும், தனது மகனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது, அக்கால யூத மதச் சட்டம். ஆனால், உலகெல்லாம் ஆள்பவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவும், அவரின் திருமகன் இயேசுவும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர்களா? இவர்கள் இச்சட்டத்தை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஆயினும், மற்ற யூதத் தாய்மார் போன்று, இயேசுவின் தாயும், இயேசு பிறந்த நாற்பதாம் நாள், ஆலயம் சென்று, அச்சட்டத்தை நிறைவேற்றினார். தமது கன்னிமை, மற்றவரின் கண்களுக்குப் புதிராகத் தெரியாமல் இருப்பதற்காக, தூய்மைச் சடங்கை நிறைவேற்றினார். ஆலயத்தையே ஆலயத்திற்குக் கொண்டு சென்று, அர்ப்பணமாக்கினார். இந்நிகழ்வில், தாயும், சேயும் தங்களையே தாழ்த்தினர். தங்களைப் பெருமைப்படுத்தும் மனிதருக்கு, இவர்கள், அன்றைய நாளில், சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்தனர். இறைவனின் எண்ணங்கள், மனிதரின் எண்ணங்கள் அல்ல என்பதை, உலகுக்கு உணர்த்தினர். அன்னை மரியா தூய்மைச் சடங்கை நிறைவேற்றி, இயேசுவை அர்ப்பணித்த இந்நிகழ்வையே, பிப்ரவரி 2, இவ்வியாழனன்று, திருஅவை சிறப்பித்தது.

இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும். தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும். அன்னை மரியாவிடமிருந்து பாடம் கற்போம். “அன்புப் பிள்ளைகளே! நான் ஒரு தாயைப்போல உங்களிடம் வருகின்றேன். உங்களுக்குத் தாயாக இருப்பதை நான் விரும்புகின்றேன். ஆகவே தாழ்மையான அர்ப்பணிப்போடும், கீழ்ப்படிதலோடும், இறைத்தந்தையிடம் முழுமையான நம்பிக்கையோடும் செபியுங்கள். நான் கடவுளுக்கு முன்பாக உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன் என நம்புங்கள்” என்று, ஒரு காட்சியில் அன்னை மரியா சொல்லியிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.