2017-02-02 15:51:00

கிறிஸ்தவர்களிடம் வெறுப்பைத் தூண்டாமல் இருக்க வேண்டுகோள்


பிப்.02,2017. ஈராக் நாட்டின் நினிவே சமவெளியிலும், மோசூல் நகரிலும் கிறிஸ்தவர்கள் மீண்டும் குடியேறும் வேளையில், அங்கிருக்கும் அயல்நாட்டு இராணுவ வீரர்கள், கிறிஸ்தவர்கள் நடுவில் வெறுப்பைத் தூண்டாமல் இருக்கவேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை, முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள், விண்ணப்பித்துள்ளார்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இஸ்லாமியத் தீவிவாதிகளின் பிடியில் இருந்த மோசூல் நகரும், நினிவே சமவெளியும் மீண்டும் விடுதலை அடைந்திருப்பது குறித்து மகிழ்வை வெளியிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் மீண்டும் குடியேறுவதற்கு, ஐ.நா. அமைதிப்படையினரும் பிற நாட்டு வீரர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்பகுதியில் பணியாற்றும் படைவீரர்கள், திரும்பி வரும் கிறிஸ்தவர்களை, மேலும் துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளாமல் இருக்கவேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும், அவர்கள் மனதில் வெறுப்பை வளர்த்து, அவர்களை, ஓர் எதிர்ப்பு சக்தியாக உருவாக்காமல் இருக்கவேண்டும் என்றும், முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஈராக் நாட்டில் இயங்கிவரும் இராணுவம், மற்றும் காவல்துறை இவற்றில் கிறிஸ்தவர்கள் இணைந்து பணியாற்றுவது குறித்து தனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று கூறிய முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், தீவிரவாதத்தை அழிக்கும் ஒரு தனிப்படையாக கிறிஸ்தவர்கள் மாறாமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.