2017-02-02 15:21:00

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோர் உலக நாளும், திருத்தந்தையும்


பிப்.02,2017. "அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு, இறைவனின் பெரும் கொடை: அக்கொடை, திருஅவைக்கும், இறைமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது" என்ற சொற்கள், பிப்ரவரி 2, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோர் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

துறவு வாழ்வையும், அர்ப்பண வாழ்வையும் மேற்கொண்டுள்ள அனைவருக்காகவும், பிப்ரவரி 2, இவ்வியாழனன்று சிறப்பாக செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் சிறப்பான வேண்டுகோளை விடுத்தார்.

ஆண்டவரை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாள் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் வேளையில், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவரின் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.

இத்திருநாளன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், மாலை 5.30 மணிக்கு, இருபால் துறவியர், மற்றும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவருக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோர் உலக நாள், 1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் நிறுவப்பட்டு, இவ்வாண்டு, 21வது முறையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.