2017-02-01 15:27:00

மாபெரும் மனிதக் குடும்பத்தை உருவாக்க முடியும் - திருத்தந்தை


பிப்.01,2017. "நாம் ஒருவர் ஒருவரை, உடன்பிறந்தோராகக் கண்டு, அவ்வண்ணமே வாழ்வதை இறைவன் விரும்புகிறார்; இவ்வாறு, நம் பன்முகத்தன்மையில் ஒருங்கிணைப்பைக் காணும், மாபெரும் மனிதக் குடும்பத்தை நம்மால் உருவாக்க முடியும்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 1, இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள், புலம் பெயர்ந்தோரின் வருகையைத் தடுக்கும் வகையில், கடந்த வெள்ளியன்று வெளியிட்ட அரசாணைக்கு மறுப்பு தெரிவித்து, அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டினார்தோ அவர்களும், துணைத் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்களும் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மனித மாண்பைப் பாதுகாக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் துவங்கி, கத்தோலிக்கத் திருஅவை, அனைத்து மதத்தினரையும் மதிப்பதற்கும், அவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என்பதை, இச்செய்தியில் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆயர்கள், அநீதிமான முறையில் துன்புறும் அனைவருக்கும் உதவுவது, கத்தோலிக்கரின் தலையாயக் கடமை என்று கூறியுள்ளனர்.

ஏரோது மன்னனின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து தப்பித்து, அண்டை நாட்டில் அடைக்கலம் புகுந்த இயேசு, இறுதிவரை, தன் தலைசாய்க்க இடமின்றி தவித்தார் என்று இச்செய்தியில் கூறியுள்ள ஆயர்கள், இன்று, ISIS போன்ற கொடுமைக்காரர்களிடமிருந்து தப்பித்து வரும் புலம் பெயர்ந்தோரில் நாம் இயேசுவைக் காண்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று தங்கள் செய்தியில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.