2017-02-01 16:19:00

பிப். 5, சுவிட்சர்லாந்து தலத்திருஅவையில் நோயுற்றோர் ஞாயிறு


பிப்.01,2017. ஒவ்வொரு தனி மனிதரின் மதிப்பும், அவர்களது வயது, சக்தி இவற்றை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக, அவர்கள் அனைவரும் இறைவனின் திட்டத்தில் ஓர் அங்கம் என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்று, சுவிட்சர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 5, வருகிற ஞாயிறன்று, சுவிட்சர்லாந்து தலத்திருஅவை, நோயுற்றோர் ஞாயிறைக் கொண்டாடுவதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவையின் சார்பில், ஆயர் மேரியன் எலகன்ட் (Marian Elegant) அவர்கள், இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில், முதிர்ந்த வயதினர்மீது அக்கறையின்மை அதிகரித்து வருவதால், அவர்களில் பலர், தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை தன் செய்தியில் கூறியுள்ள ஆயர் எலகன்ட் அவர்கள், நோயுற்றோர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள சட்டங்களின் உதவிகள் இருப்பதால், இத்தகைய தற்கொலைகள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்.

அனைத்து மனிதரும், குறிப்பாக, வயது முதிர்ச்சியாலும், உடல் தளர்ச்சியாலும் துன்புறுவோர், மதிப்புள்ளவர்கள் என்பதை, சுவிட்சர்லாந்து தலத்திருஅவை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று, ஆயர்கள் விடுத்துள்ள செய்தி விண்ணப்பிக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.