2017-02-01 10:34:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 2


பிப்.01,2017.  இயேசுவின் உயிர்ப்பு, கிறிஸ்தவ விசுவாசத்தின் தொடக்கமாக இருந்தது. திருத்தூதர்கள், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்னர், அவரின் உயிர்ப்பினால் உயிரூட்டம் பெற்றனர். உயிர்த்த இயேசு, நாற்பது நாள்கள் அளவாக, தம் திருத்தூதர்களுக்குப் பலமுறை தோன்றி இறையாட்சியைப் பற்றி எடுத்துச் சொன்னார். பல தெளிவான சான்றுகளால் தம் உயிர்ப்பை விளக்கினார். உயிர்த்த இயேசுவின் வாக்குறுதியின்படி, திருத்தூதர்கள் தூய ஆவியாரைப் பெற்றனர். அன்றிலிருந்து அவர்கள் அனைவரின் வாழ்வும், போதனைகளும், செயல்களும், எல்லாரும் வியக்கும் வகையில் அமைந்தன. திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் இயேசுவைப் பற்றி, துணிச்சலாக அறிவித்து வந்தனர். சிறைக் கதவுகளும், யூதத் தலைவர்களின் அச்சுறுத்தல்களும் அவர்களின் நாவைக் கட்டி வைக்க இயலவில்லை. பேதுரு திருஅவையின் வளர்ச்சிக்கு மிகவும் வலுவான அடித்தளம் அமைத்தார். பேதுரு, இயேசுவின் பெயரால் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். யோப்பா நகரில் வாழ்ந்த, தபித்தா எனும் பெண் சீடர், இறந்த பின், அவரை உயிருடன் எழுப்பினார். இந்த அருஞ்செயல்களையெல்லாம் கண்ட பலர், இயேசுவில் விசுவாசம் கொண்டு கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.

இதற்கிடையில், திருத்தூதர் யோவானின் சகோதரரும், இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவருமான யாக்கோபும், பல நோயாளர்களைக் குணமாக்கி வந்தார். இவர் தனது ஆற்றல்மிக்க பேச்சுத் திறனால் இயேசு பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார். இதனால், திருஅவையில் பலர் இணைந்தனர். இதனால் எரிச்சலடைந்த ஏரோது மன்னன், திருஅவையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துத் கொடுமைப்படுத்தினான். திருத்தூதர் யாக்கோபையும் வாளால் வெட்டிக் கொன்றான். ஏரோதின் இச்செயல் யூதர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. எனவே, அவன், பேதுருவையும் கைது செய்து சிறையில் அடைத்தான். பேதுருவையும், யோவானையும் முன்பு சிறையில் அடைத்தபோது, அவர்கள் அற்புதமாய் இரவில் வெளியேறி, மறுநாள் கோவிலில் போதித்துக் கொண்டிருந்ததால், இம்முறை, படை வீரர்களில் பலசாலிகள் பதினாறுபேரை தேர்ந்தெடுத்து நான்கு குழுக்களாக அவர்களை அமைத்து பேதுருவுக்குக் காவல் இருக்க ஏற்பாடு செய்தான். பேதுரு இரண்டு காவலர்களுக்கு இடையே சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். வெளியே காவலர்கள் பல நிலைகளில் நின்று காவல் செய்துகொண்டிருந்தார்கள் அதேநேரம், கிறிஸ்தவர்கள் பேதுருவுக்காகச் செபித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், ஆண்டவரின் தூதர், பேதுருவை, சிறையிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றி, வெளியே அழைத்து வந்தார். சிறையின் கதவுகள் தானே திறக்க, முதல் நிலை, இரண்டாம் நிலை என, ஒவ்வொரு காவல் நிலையாகக் கடந்து, தூதர் பேதுருவை அழைத்துச் செல்கையில், நகருக்குச் செல்லும் இரும்பு வாயிலும், தானாகவே திறந்தது. பாதுகாப்பான ஓர் இடம் வந்ததும், வான தூதர் மறைந்தார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, அதுவரை நடந்தவையெல்லாம் கனவு அல்ல என்பதை உறுதி செய்து கொண்டார். அவர் நேராக, மாற்கு எனப்படும் யோவானின் தாய் மரியாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கே பலர் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சென்று, பேதுரு நடந்ததையெல்லாம் சொல்ல, அவர்களின் விசுவாசமும் ஆழமானது. ஏரோது மன்னனோ கடும் கோபத்தில் இருந்தான். பேதுரு பயப்படாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.

பேதுரு தனது பணியை இஸ்ரேல் நாட்டின் மேற்கு எல்லையிலுள்ள மத்திய தரைக் கடற்கரையோரமாக விரிவுபடுத்தினார். அந்தியோக்கியாவில் தங்கி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், மக்கள் வாழ வேண்டிய வழிகளையும் போதித்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார். பின் பவுல் காலத்தில், பேதுரு கொரிந்து நகரில் தன்னுடைய இறைப்பணியை விரிவு படுத்தினார். கி.பி 33ம் ஆண்டு முதல், கி.பி 40 ம் ஆண்டுவரை, ஏழு ஆண்டுகள் அந்தியோக்கியா நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். தற்போதைய துருக்கியாகிய ஆசியா மைனர் பகுதியிலும், அவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார். அங்கிருந்து எகிப்துக்குப் பயணமாகி எகிப்து நாட்டிலும், இயேசுவைப் பற்றித் துணிச்சலாக போதித்தார்.

பேதுரு கி.பி 67ல் உரோமையில், கைது செய்யப்பட்டார். இன்றும் உரோமையில் இச்சிறைகளையும், கைவிலங்குகளையும் காணலாம். வெளிச்சமும் காற்றும் வராத அறையில் பேதுருவும் அடைக்கப்பட்டார். உணவோ, நீரோ எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. சாவின் விளிம்பிலும், நற்செய்தியைத் துணிச்சலுடன் எடுத்துரைத்தார் பேதுரு. சிறையில், பேதுருவின் போதனையைக் கேட்ட பலர், கிறிஸ்தவர்களானார்கள். அப்போதைய உரோமைப் பேரரசர் நீரோ மன்னனுக்கு கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. பேதுரு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட வேண்டும். என, ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது, பேதுரு, என் ஆண்டவர் இயேசு போலன்றி, தலைகீழாக தன்னைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டுக்கொண்டார். வத்திக்கான் குன்றின் உச்சியில் பேதுரு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மீது வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயலம் அமைக்கப்பட்டுள்ளது. திருஅவையின் முதல் திருத்தந்தையாக, தொடக்க காலத் திருஅவையை வழிநடத்தியவர் திருத்தூதர் பேதுரு.

இயேசு, பேதுருவிடம், உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின்மேல் என் திருஅவையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா (மத்:16,18) என்று சொன்னார்.  அதைத்தான் இன்றுவரை, கிறிஸ்தவத்தில் உலகம் பார்த்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.