2017-01-31 15:34:00

நோயாளர்மீது இயேசு கொண்டிருக்கும் மனநிலையைப் பின்பற்றவோம்


“நோயுற்றோர்மீது இயேசு கொண்டுள்ள மனநிலையை, நாமும் பின்பற்றுவோம். இயேசு, ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டி, அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் இதயங்களை, நம்பிக்கை வாழ்வுக்குத் திறக்கிறார்” என, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் 114வது நிறையமர்வு கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் இடம்பெறும் ஆயர்களின் கலந்துரையாடல்கள், தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கும், பிலிப்பீன்ஸ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுக்கு, விசுவாசத்தின் ஒளியில் தீர்வுகள் காணப்படுவதற்கும் தான் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னும், பிலிப்பீன்சில், சிறார் குற்றவாளிகளின் வயதைக் குறைப்பதற்கு அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் சிந்தித்து வருவது குறித்து, கருத்து தெரிவித்துள்ளனர், பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

நாட்டில் இளம் குற்றவாளிகள் அதிகரித்துவருவதைக் குறைக்கும் நோக்கத்தில், இவர்களின் வயதை 15லிருந்து 9ஆகக் குறைக்க நினைப்பதாக அரசுத்தலைவர் கூறியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரட்டீஸ் வியேகாஸ் அவர்கள், சிறாரை அல்ல, ஆனால், ஆட்சியிலுள்ள குற்றவாளிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார். 

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் 114வது நிறையமர்வு கூட்டம், இத்திங்களன்று நிறைவடைந்தது.

ஆதாரம்: CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.