2017-01-31 15:42:00

கியுபெக் மசூதி தாக்கப்பட்டதற்கு திருத்தந்தை வன்மையான கண்டனம்


சன.31,2017. கானடா நாட்டின் கியுபெக் நகரில், மசூதி ஒன்று தாக்கப்பட்டது குறித்து தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ள அதேவேளை, அனைத்து விதமான வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிரான, தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கியுபெக் பேராயர் கர்தினால் Gérald Cyprien Lacroix அவர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது, இத்தாக்குதல் குறித்த தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.

உரோம் வந்திருந்த கர்தினால் Lacroix அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், உடனடியாக கானடாவுக்குப் புறப்பட்டு விட்டார்.

இத்தாக்குதல் குறித்த தந்திச் செய்தி ஒன்றையும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், கியுபெக் பேராயர் கர்தினால் Lacroix அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், இத்தாக்குதல் குறித்து, தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கியுபெக் நகரின் இஸ்லாமிய கலாச்சார மையத்திலுள்ள தொழுகை அறையில், இஞ்ஞாயிறு (சனவரி 29) இரவு எட்டு மணியளவில், மாலை செபம் நடந்துகொண்டிருந்தபோது, ஆண்கள் பகுதியில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும், எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலியான ஆண்கள் எல்லாரும், 35க்கும், 70 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.