2017-01-30 16:41:00

ஹான்சன் நோயாளர்களுடன் பணிபுரிவோருக்கு செப உறுதி


சன.,30,2017. இஞ்ஞாயிறன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக தொழுநோயாளர் தினம் எனும் ஹான்சன் நோய் விழிப்புணர்வு தினம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நோயாளர்களுக்கும், அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கும் தன் செப உறுதியையும் வழங்கினார்.

தொழுநோயின் தீவிரம் அண்மைக் காலங்களில் குறைந்து வருகின்றபோதிலும், இன்னும் அது, ஏழைகளையும், வாழ்வின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோரையும் பாதித்து வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயை எதிர்த்து போராட வேண்டியது அவசியம் என்றும், அதேவேளை, இந்நோயாளர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கு எதிராக போராடவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்விற்காக உழைப்போருக்கு தன் ஊக்கத்தை வழங்குவதுடன், அவர்களுக்கான செபத்திற்கும் உறுதி வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு செப உரையின் இறுதியில், திருத்தந்தையுடன் தோன்றிய 'கத்தோலிக்க நடவடிக்கை' குழுவின் இளையோர் இருவர், அமைதிக்கு ஆதரவான செய்தியை வாசித்தனர். அதன்பின், தூய பேதுரு வளாகத்தில், வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.