2017-01-30 16:35:00

'ஏழையரின் உள்ளத்தோர்' அதிகரித்தால், பிரிவினைகள் குறையும்


சன.,30,2017. 'ஏழையரின் உள்ளத்தோர்' என்பவர்கள், தங்களிடம் இருப்பது குறித்தும், தங்கள் கருத்துக்கள் குறித்தும் வலியுறுத்தாமல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து மதிப்பவர்கள் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'பேறுபெற்றோர்' பற்றி இயேசு எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய சமூகங்களில் 'ஏழையரின் உள்ளத்தோர்' எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கின்றார்களோ, அதைப்பொருத்து, பிரிவினைகளும், முரண்பாடுகளும், மோதல்களும் குறைவாக இருக்கும் என தெரிவித்தார்.

ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறார், மற்றும், அவர்களுக்கு விடுதலை வழங்குகிறார் என இறைவாக்கினர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும், இயேசுவின் வார்த்தைகளோ, 'பேறுபெற்றோர்' என்ற மகிழ்ச்சியினை சுட்டிக்காட்டுவதாகத் துவங்கி, இடையில் ஒரு முன்நிபந்தனையையும் வைத்து, ஒரு வாக்குறுதியுடன் நிறைவுறுகிறது என்றார்.

கிறிஸ்தவ சமூகம், ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு, பிறரன்பு செயல்கள் தேவைப்படுவதுபோல், தாழ்ச்சியும் இன்றியமையாதது எனவும் கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் 25,000க்கும் மேற்பட்ட திருப்பயணிகள் குழுமியிருந்தனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.