2017-01-28 15:35:00

பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரப் பெண்ணுக்கு மரண தண்டனை


சன.28,2017. பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரப் பெண் ஒருவருக்கு, குவெய்த்தில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

குவெய்த்தில், இப்புதனன்று, பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரப் பெண் Jakatia Pawa, குவெய்த் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட, ஏழு பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரப் பெண் Jakatia அவர்கள், தான் வேலை செய்த வீட்டில்,  22 வயது நிரம்பிய இளம்பெண்ணைக் கொலை செய்தார் என்று, 2007ம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும், தான் குற்றமற்றவர் என்றே, கடைசிவரை கூறி வந்தார் Jakatia.

இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்ட, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, பிலிப்பீன்ஸ் மக்கள், மரண தண்டனையைப் புறக்கணிக்க வேண்டுமென்ற எச்சரிக்கையை, இது விடுக்கின்றது எனக் கூறியுள்ளது.

பிலிப்பீன்சில், 2006ம் ஆண்டில், மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது.

குவெய்த்தில், 2013ம் ஆண்டுக்குப் பின்னர், மூன்று பெண்கள் மற்றும், நான்கு ஆண்களுக்கு, முதல் முறையாக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் குவைத் நாட்டவர். இருவர் எகிப்தியர்கள். மேலும், மூன்று பேர் பிலிப்பீன்ஸ், பங்களாதேஷ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.