2017-01-27 16:00:00

யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இன்று நினைக்கின்றேன்


சன.27,2017. “யூதர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதை, இன்று, என் இதயத்தில் நினைக்க விரும்புகிறேன். அவர்களின் துன்பங்களும், கண்ணீரும் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது” என, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் உலகப் போரின்போது, இலட்சக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் உலக நாளான, சனவரி 27, இவ்வெள்ளியன்று, இவ்வாறு, தனது டுவிட்டரில், தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஐரோப்பிய யூத அவையின் ஐந்து பிரதிநிதிகளையும், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாத்சி அரசால், படுகொலை செய்யப்பட்ட, ஏறக்குறைய அறுபது இலட்சம் ஐரோப்பிய யூதர்களையும், இன்னும் பிற பகுதிகளில் வாழ்ந்த, இலட்சக்கணக்கான யூதர்களையும் நினைவுகூர்ந்து, மீண்டும் உலகில், இத்தகையதொரு படுகொலைகள், நடவாதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், உலகளவில், யூத இனப் படுகொலை நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.   

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாத்சி அரசு நடத்திய மிகப்பெரிய மரண முகாமை (Auschwitz-Birkenau), 1945ம் ஆண்டு சனவரி 27ம் தேதி, முன்னாள் சோவியத் படைகள் விடுவித்தன. இந்த நாளே, ஒவ்வோர் ஆண்டும், யூத இனப் படுகொலை நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  

“யூத இனப் படுகொலை நினைவு : சிறந்ததோர் வருங்காலத்தைக் கற்றுக்கொடுத்தல்” என்ற தலைப்பில், 2017ம் ஆண்டின், இந்த உலக நாள், இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.