2017-01-27 14:32:00

பாசமுள்ள பார்வையில்...: இறைவனின் சாயலில் தொடர்பவர் தாய்


அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் (1 கொரிந்தியர் 13:4–7),

என புனித புவுல் கூறுகிறார். இதில் அன்பு என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, அதில் அம்மா என்ற பதத்தை இங்குள்ள குணங்களுடன் பொருத்திப் பாருங்கள்.  எவ்வித முரண்பாடும் தோன்றாது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த குணநலன்கள், அன்பைவிட, அம்மாவுக்கே அதிகம் பொருந்துவதுபோல் தோன்றும். ஏனெனில், அன்பிலெல்லாம் உயர்ந்த அன்பு, தாயிடம்தான் உண்டு. அப்படியானால், கடவுளின் அன்பை என்னச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். அந்த கடவுளின் அன்பிற்கே தாய் அன்பைத்தானே எடுத்துக்காட்டாக முன்வைக்க வேண்டி உள்ளது. மீண்டும் விவிலியத்தை எடுத்து எசயா நூலைப் பார்த்தால், “பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.”(எசாயா 49:15), என வாசிக்கிறோம். 'தாய் மறப்பாளோ', 'இரக்கம் காட்டாதிருப்பாளோ' என்று கேட்பதன் தொனியே நமக்கு உணர்த்துகிறது, அப்படி எந்த தாயும் இருக்கமாட்டார் என்பதை. இங்கு, தாயின் அன்பிலிருந்துதான் நாம் கடவுளின் அன்பை நெருங்கிப் போகிறோம். 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்', அதாவது, கடவுளுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டும் திறனுடன் மானிடர் படைக்கப்பட்டிருப்பதாக விவிலியம் சொல்கிறது (தொடக்கநூல் 1:27). இறைவனின் உன்னத குணங்களுடன் படைக்கப்பட்ட நாம், இன்று பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால்,  அனைத்து உன்னத குணங்களையும் இன்றும் அழியாமல் காப்பாற்றி, தன்னில் செயல்படுத்தி வருபவர் தாய். அந்த அன்பைப் பற்றி புனித பவுல் கூறியதைத்தான், நாம் துவக்கத்தில் குறிப்பிட்டோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.