2017-01-27 15:47:00

அனைத்திற்கும் பயப்படும் பாவம் கிறிஸ்தவர்களை முடமாக்குகின்றது


சன.27,2017. கிறிஸ்தவர்களாகிய நம்மை முடக்கிப்போடும், கோழைத்தனம் என்ற பாவத்தினின்று, இறைவன் நம்மை விடுவிக்கிறார் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் வருங்காலத்தை வைத்து, கிறிஸ்தவ வாழ்வு அமைய வேண்டும் என்பதற்கு அழைப்பு விடுக்கும், இவ்வெள்ளிக்கிழமை திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகம், நம் வாழ்வில், முன்னைய நாள்களை நினைவுகூர்ந்து வாழ அழைக்கின்றது என்று கூறினார். நினைவு, நம்பிக்கை, துணிவு, பொறுமை ஆகியவற்றை நம்மிடருந்து அகற்றும், கோழைத்தனம் என்ற பாவத்தில் நாம் விழாமலிருக்குமாறு, இம்மடலின் ஆசிரியர் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பாவம், அச்சத்தின் வழியாக, நம்மை முன்னோக்கிச் செல்லவிடாமல் தடைசெய்யும் என்று கூறினார்.

கோழையாய் இருப்பவர்கள், எப்போதும் பின்னோக்கிப் பார்ப்பார்கள், தங்கள்மீது மிக அதிகமாக அக்கறை காட்டுவார்கள், இவர்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள் என்று, மறையுரையில் கூறிய திருத்தந்தை, இந்தப் பாவத்திலிருந்து நம்மை விடுவிக்குமாறு, ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்றும் கூறினார்.

நம் வாழ்வில் நடந்த நன்மையோ, தீமையோ, எல்லாவற்றையும் நினைவுகூர்ந்து, எதையும் மறைக்காமல், இறைவன்முன், நம் வாழ்வைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நினைவு என்பது ஓர் அருள், கிறிஸ்தவர், நினைவின் மனிதர் என்றும், கடந்த காலங்களில், ஆண்டவரிடமிருந்து நாம் பெற்ற பல அருள்கொடைகளை மறந்துவிடாமல் வாழுமாறும் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

நிகழ்காலம், வேதனையும், சோகமும் கலந்ததாய் பல நேரங்களில் உள்ளது, எனினும், துணிவோடும், பொறுமையோடும் நிகழ்காலத்தில் வாழ, இத்திருமடல் ஆசிரியர் விண்ணப்பிக்கின்றார் எனவும், நாம் நம் ஆண்டவரைச் சந்திப்பதற்காக, நம்பிக்கையோடு தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறோம் எனவும், எனவே இந்நம்பிக்கையில் வளருவதற்கு, மனஉறுதியையும், பொறுமையையும் தருமாறு, ஆண்டவரிடம் மன்றாடுவோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.