2017-01-26 15:11:00

நேர்காணல் – 68வது இந்திய குடியரசு தினம்


சன.26,2017. சனவரி 26, இவ்வியாழன் 68வது இந்திய குடியரசு தினம். 1929ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைச் செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவுசெய்து அறிவிப்பார் என்று, மற்றுமொரு தீர்மானமும் அன்று நிறைவேற்றப்பட்டது. அக்காலத்தில் காணப்பட்ட தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதன் முதல் கட்டமாக, 1930ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதியன்று, நாடு முழுவதும் அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என, காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, அன்றைய தினம், நகரங்களிலும் கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள்கூடி, "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதருக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் என, சுதந்திர தின உறுதிமொழி எடுத்தனர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் சனவரி 26. சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட, 1949ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதியன்று ஜவகர்லால் நேரு அவர்களின் அமைச்சரவை முடிவு செய்தது. 1950ம் ஆண்டு முதல், இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, மரியின் ஊழியர் சபை அருள்பணி ஜான் பால் அவர்களைச் சந்திப்போம்.

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறுசிறு குறுநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்தனால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி நாடு முழுவதும் தமது ஆட்சியை அரங்கேற்றினர். இத்தகைய ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை அகற்றி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம். சுதந்திரம் அடைந்த 3 ஆண்டுகளிலே நாம் நம்மையே சுயமாக ஆட்சி செய்யும் வகையில் சட்டத்திட்டங்களை இயற்றி ஆட்சி முறையை அமைத்துக் கொண்டதைத்தான் குடியரசு என அழைக்கின்றோம். குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி. மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆட்சி செய்வதுதான் மக்களாட்சி.

ஆண்டாண்டு காலமாக இந்திய மண்ணை கூறுபோட்டு ஆட்சி செய்து வந்த முடியாட்சி முடிவிற்கு வந்து, நம்மை அடிமைகளாக ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியும் மறைந்துபோய், இருண்ட மண்ணுக்கு காலைக் கதிரவனாய் உதித்த மக்களாட்சியைத்தான், குடியரசு விழாவாக, நாம் மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும், ஆடல் பாடலோடும் கொண்டாடுகின்றோம். இந்த விழாவைப் பற்றி இரத்தின சுருக்கமாக இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய இந்திய மண்ணை முடியாட்சி, அரசர்களின் ஆட்சி, பிறர் நாட்டவரின் அடக்குமுறை இல்லாமல், மக்களே, மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஆட்சி செய்வதுதான் மக்களாட்சி. நம்முடைய குடியாட்சியை அதிகாரப் பூர்வமாக, சட்டப்பூர்வமாக, எழுத்து வடிவில் அரசியல் சாசனமாக சட்ட வல்லுநர் அம்பேத்கார் அவர்கள் எழுதி வைத்த அரசியல் அமைப்பு முறையைத்தான் இந்தியா தனது ஆட்சிமுறையில் நடைமுறைபடுத்தி வருவதை நாம் அறிவோம். இந்த அரசியல் சாசனம், ஒருசில அடிப்படையான சனநாயக உரிமைகளை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்; அளித்துள்ளது. அதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நான் இந்தியக் குடிமகன், குடிமகள் என்று சொல்வதிலே முமுமையான அர்த்தம் உண்டு.

நம்முடைய அரசியல் சாசனத்தின் முன்னுரை கூறுவதுபோல நமது நாடு இறையாண்மைமிக்க, மதச்சார்பற்ற, சனநாயக நாடு. இந்த அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அளிக்கும் அடிப்படை உரிமைகளை நாம் தெளிவாக அறிந்து கொள்வது நமது கடமை. அவை என்னவென்றால்:

1.     சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான நீதி

2.     கருத்து சுதந்திரம், எழுத்து உரிமை, நாம் விரும்பிய மதத்தையும், வழிபாட்டையும் தேர்ந்து கொள்ளும்  சுதந்திரம்

3.     சமத்துவம் (அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். இதில் எந்தவிதப் பாகுபாடும் இல்லை).

4.     சகோதரத்துவம் (நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். நமக்கெல்லாம் ஒரே தாய் இந்தியத் தாய் என்ற எண்ணம் கொண்டவர்களாக வாழவேண்டும்)

நமது இந்திய அரசியல் அமைப்பையெல்லாம் அறியாமலும், புரிந்துகொள்ளமாலும் வாழ்கின்றவர்களை நாம் பார்க்கின்றோம். நமது உரிமைகளையும், கடமைகளையும் நன்கு அறிந்தால்தான் நாம் அவற்றை அனுபவிக்க முடியும். அதற்கு, நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நம் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என அரசியல் அமைப்பின் முன்னுரை நமக்கு சொல்கிறது. அந்த ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் நாம் முழுமையாக உழைக்கின்றோமா என்று சிந்தித்து பார்ப்பதற்காக இந்த விழா நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியதுபோல இயேசுவின் இறையாட்சியில் கிரேக்கர் என்றோ, யூதர் என்றோ, அடிமை என்றோ, உரிமை குடிமக்கள் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமானவர்கள் என்ற இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழவும், இனி நான் உங்களை பணியாளர் என்று அழைக்கமாட்டேன் நண்பர்கள் என்று அழைப்பேன் என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப அவரது இறையாட்சி மலர்ந்தது போல, இவ்வுலகில் குடியாட்சி மலரவும், அதாவது நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் என்ற உணர்வோடு அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பண்புகளில் வளரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை, உரிமை குடிமக்களாக நமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நான் நாட்டிற்கு என்ன செய்திருக்கின்றேன் என்று நம்மையே நாம் கேட்டுக்கொண்டு, நமது பெருமைமிகு பண்பாட்டு, பாரம்பரியத்தைக் காப்போம், இந்த சுதந்திர காற்றான, குடியரசு காற்றைச் சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைத்து பார்த்து வீரவணக்கம் செலுத்துவோம்.

உண்மைதான் நம் பண்பு! உழைப்புதான் நம் தெம்பு! அன்பு ஒன்றுதான் நம் பிணைப்பு! என்று வாழ்வோம். வாழ்க பாரதம்! ஜெய் கிந்த் (நன்றி - அருள்பணி ஜான் பால் ம.ஊ.ச)








All the contents on this site are copyrighted ©.