2017-01-25 15:43:00

'ஜல்லிக்கட்டு' காப்பாற்றப்படவேண்டும் - மதுரை பேராயர்


சன.25,2017. தமிழர்களின் கலாச்சார அடையாளமான 'ஜல்லிக்கட்டு' விளையாட்டு காப்பாற்றப்படவேண்டும் என்றும், அதைத் தடுக்க நினைப்பது, தமிழர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்றும் மதுரை பேராயர், ஆன்டனி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக தமிழகமெங்கும் இளையோர் மேற்கொண்ட ஓர் அறப்போராட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆயர்களின் தலைவராகிய பேராயர் பாப்புசாமி அவர்கள், இந்தப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு முயற்சி என்று கூறினார்.

இதற்கிடையே, இந்திய கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட இளையோரின் ஊர்வலம் ஒன்று, மங்களூரு நகரில் நடைபெற்றது என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 10,000த்திற்கும் அதிகமான இளையோர் பங்கேற்றனர்.

பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்ட இந்தியாவில், அமைதியையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்க, இளையோரின் பங்கு என்ன என்பது, இந்த மாநாட்டின் மையக்கருத்தாக அமைந்தது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.