2017-01-25 14:36:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 1


சன.25,2017. உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை. சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை. உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை. இவ்வாறு  உண்மை, வாய்மை, மெய்மை ஆகிய பண்புகளை, தமிழர், மிக அழகாக, விளக்கியுள்ளனர். இந்தப் பண்புகள் பிறழப்படும்போது, என்ன நடக்கும் என்பதை, திருத்தூதர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும், கிறிஸ்தவத்தின் ஆரம்ப மறைப்பணியாளர்கள். இவர்களின் போதனைகளைக் கேட்டும், இவர்கள் ஆற்றிய அற்புதங்களைக் கண்டும், இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்களில் எவரும், தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாமே அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. இத்தகைய சூழலில், அனனியா என்பவர், தன்னுடைய நிலத்தை விற்று, விற்ற தொகையில், ஒரு பகுதியைத் தன் மனைவி சப்பிரா அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதர் பேதுருவின் காலடியில் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது பேதுரு, அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு, தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப் பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய் என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான்.

ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின், அனனியாவின் மனைவி உள்ளே வந்தாள். நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது. பேதுரு அவளைப் பார்த்து, நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல் என்று கேட்க, அவள் ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று பதிலளித்தாள். மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள் என்றார். உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள். திருஅவையினர் உட்பட, இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது. வாழ்வில் பொய்கூட உரைக்கலாம். ஆனால், உண்மை பேசுபவன் போல் ஒருபோதும் நடிக்காதே என்பார்கள். பொய் சொன்னால், சாமி கண்ணைக் குத்தும் என்பது எவ்வளவு உண்மை. அன்னியா தம்பதியரின் உண்மையற்ற நிலைக்கு கிடைத்த பரிசே உடனடி மரணம். பேதுரு இவர்களின் சொத்தைக் கேட்கவில்லை. ஆனால், அவர்கள் தங்களின் சொத்தை விற்ற பணத்தைக் கொடுத்தபோது, நேர்மையின்றி நடந்துகொண்டனர். இதனாலே அவர்களுக்குத் தண்டனை கிடைத்தது.  

திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும், மக்களிடையே பல அரும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்தனர். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல், சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள். எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து, மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்துகொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர். இதனால், யூதத் தலைவர்கள், பொறாமையால் நிறைந்து, திருத்தூதரைக் கைது செய்து, பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றார். அத்தூதர் கூறியபடி, அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும், அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிப்பதை அறிந்தனர். எனவே, திருத்தூதர்களை யூதத் தலைமைச் சங்கத்திற்கு அழைத்து, நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா?, என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள் என்று, தலைமைக்குரு கேட்டார். அதற்கு, அத்திருத்தூதர்கள், மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? என்று பதில் சொன்னதைப் பார்த்து, கொதித்தெழுந்து திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். ஆனால், மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியரான கமாலியேல், இவர்களைக் காப்பாற்றினார்.

இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில், கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்: அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால், அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது: நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள். அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். ஆயினும், அவர்கள், திருத்தூதர்களை நையப்புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு, விடுதலை செய்தனர். ஆனால், திருத்தூதர்கள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை தொடர்ந்து அறிவித்து வந்தார்கள்.

உண்மைக் கடவுளின் வல்லமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. அதுதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருஅவையின் வரலாறு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.