2017-01-25 15:37:00

உலக இளையோர் நிகழ்வுகள் குறித்து கர்தினால் கெவின் பாரேல்


சன.25,2017. மத்திய அமெரிக்க மக்களின் வாழ்வில் தனியிடம் வகிக்கும் அன்னை மரியாவை மையப்படுத்தி, பானமா நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருப்பது, பொருத்தமாக உள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்து, பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரேல் (Kevin Farrell) அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நற்செய்தி பரவுவதற்கு, பானமா நாடு 1513ம் ஆண்டு முதல், ஒரு வாசலாக அமைந்துள்ளது என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் பாரேல் அவர்கள், மத்திய அமெரிக்க ஆயர்கள் இணைந்து இந்த நாட்டைத் தேர்ந்தெடுத்ததையும் கூறினார்.

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு, பானமா நாட்டில் உள்ள ஏனைய கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இளையோரையும் இணைத்திருப்பது, மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முடிவு என்று, கர்தினால் பாரேல் அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.