2017-01-25 15:48:00

இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையின் கூட்டம்


சன.25,2017. இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை, சனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய, இந்தியாவின் போபால் நகரில், தன் 29வது நிறையமர்வு கூட்டத்தை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, "அன்பின் மகிழ்வை நம் குடும்பங்களில் வளர்த்தல்" என்பது மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடர்ச்சியாகவும், 'அன்பின் மகிழ்வு' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மடலின் தொடர்ச்சியாகவும் நடைபெறும் இந்த பேரவைக் கூட்டத்தை, இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் துவக்கி வைப்பார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி, இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை குடும்பப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் லாரன்ஸ் பயஸ் உட்பட, பலர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

132 மறைமாவட்டங்களையும், 182 ஆயர்களையும் கொண்ட இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவை, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேரவை என்பதும், உலகிலேயே இது நான்காவது இடம் வகிக்கிறது என்றும், UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.