2017-01-24 15:34:00

இறைவிருப்பத்தை புரிந்துகொள்ள முயல்வது, கிறிஸ்தவ வாழ்வு


சன.24,2017. இறைவிருப்பத்தை நிறைவேற்றும் பணியில் நாம் தொடர்ந்து நடக்கவும், இறைவனுக்கு ஒவ்வொரு காலத்திலும் மக்கள் வழங்கியுள்ள பதில்களை அறிந்துகொள்ளவும், விவிலியத்தை எடுத்து வாசிப்பது பலனளிக்கும் என இச்செவ்வாய்க் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை விருப்பத்தை புரிந்துகொள்வதையும், இறைவனுக்கு பதில் வழங்குவதையும் குறித்த மூன்று விவிலிய நபர்களின் உதாரணங்களை முன்வைத்து விளக்கினார்.

இறைவன் நம்மை அழைக்கும்போது, ஆண்டவரே நான் இங்கே இருக்கிறேன், என்றோ, நீர் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர், என்றோ கேட்காமல், முதல் மனிதன் ஆதாமைப் போல் ஒளிந்து கொள்ள முயல்கிறோமா, அல்லது, தனக்கிட்ட பணியை முன்னெடுத்துச் செல்ல பயந்து, யோனாவைப்போல் தப்பியோட முயல்கின்றோமா என்ற கேள்வியை முன்வைத்தார் திருத்தந்தை.

மூன்றாவது எடுத்துக்காட்டாக, யோபுவை முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் இங்கிருக்கிறேன் என இறைவனுக்கு பதில் மொழி வழங்கிய யோபு, மிகுந்த பொறுமையுள்ளவராக இருந்தார் என எடுத்துரைத்தார்.

இறைவிருப்பத்தை தொடர்ந்து நிறைவேற்ற முன்வரும் கிறிஸ்தவ வாழ்விற்கு யோபு அவர்கள் சிறந்ததொரு எடுத்துக்காட்டு என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நான் இங்கிருக்கிறேன். உமது விருப்பத்தை நிறைவேற்ற காத்திருக்கிறேன்' என்ற வார்த்தைகள் மிக அழகு நிறைந்தவை என்றார்.

இயேசு காலத்தைய சட்ட வல்லுனர்கள்போல், வெளிப்பார்வைக்கு மட்டும் இறைவனின் சட்டங்களை நிறைவேற்றுபவர்களாக வாழவேண்டாம், ஏனெனில் வழியில் அடிபட்டு கிடந்த நல்ல சமாரியரை கண்டும் காணாமல் சென்ற லேவியரும், குருவும், வேத புத்தகத்தில் உள்ளதை மட்டும் செய்வோம், அதற்குமேல் தேவையில்லை என எண்ணியவர்கள் எனவும் கூறினார் திருத்தந்தை.

இறைவனின் விருப்பத்தை அறிய நாம் செபிக்கும்போது, அவரிடம் கோபம் இருந்தால் அதையும் தெரியப்படுத்துவோம், ஏனெனில் அவர் நம் தந்தை, நம் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்த நமக்கு உரிமை உள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் இறைவனின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள, தூய ஆவியானவரின் அருள் நமக்கு உதவும் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.