2017-01-23 16:26:00

உப்பாகவும் ஒளியாகவும் 800 ஆண்டுகள் உழைத்துள்ள துறவு சபை


சன.23,2017. உப்பாகவும், ஒளியாகவும் இருந்து கடந்த 800 ஆண்டுகளாக நற்செய்தியை உலகெங்கும் பரப்பிவரும் தொமினிக்கன் துறவு சபைக்கு தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொமினிக்கன் துறவு சபை உருவாக்கப்பட்டதன் 800ம் ஆண்டையொட்டி உரோம் நகரின் புனித ஜான் இலாத்ரன் பேராலயத்தில், சனிக்கிழமை மாலை, அத்துறவு சபை அங்கத்தினர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபையை உருவாக்கிய புனித தோமினிக் அவர்கள், தன் வார்த்தைகளாலும் தன் வாழ்வு நடவடிக்கைகளாலும் நற்செய்தியை உலகெங்கும் பரப்பினார் என்றார்.

இன்றைய உலகின் தூக்கியெறியும் கலாச்சார மனப்பான்மைக்கு எதிராக உறுதியான ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் ஏக்கங்களை, நற்செய்தி சாட்சியத்தின் வழியாக எதிர்கொள்ளவேண்டும் என்றார்.

திருஅவைக் கோட்பாடுகளை மக்கள் புரிந்துகொள்ளவும், நற்செய்தியின் இனிமையை உணரவும் மக்களுக்கு உதவியுள்ளதுடன், அவர்களும், உப்பாகவும், ஒளியாகவும், நற்செயல்களின் கலைஞர்களாகவும் மாற, தொமினிக்கன் துறவுசபையினர் உதவியுள்ளனர் என மேலும் தன் பாராட்டுதல்களை வெளியிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.