2017-01-23 16:29:00

அனைத்துப் பகுதிகளுமே நற்செய்தி விதைக்கு ஏற்ற இடங்களே


சன.23,2017. மீட்பின் வரலாறு எங்கிருந்து துவங்கும் என மக்கள் எதிர்பார்க்கவில்லையோ, அதே புறவினத்தாரின் கலிலேயாப் பகுதியிலிருந்து அது துவங்கியது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ராயேலுடன் தொடர்பில்லாத மக்களுடன் நெருங்கி உறவுகொள்ளுவதே தீட்டு என எண்ணப்பட்ட அந்த காலத்தில், இயேசு, புறவினத்தாரின் கலிலேயாவிலிருந்து தன் ஒளியை பரவச் செய்தார் எனக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்கும் உள்ள வெளிப்படையான வேறுபாடாக, ஒருவர் போதிக்க, அவரைத் தேடி மக்கள் வந்தனர், இன்னொருவரோ மக்களைத் தேடி அவர்கள் நடுவேச் சென்றார், என்றார்.

தன் முதல் சீடர்களை இயேசு அழைத்ததையும்,, அதற்கு அவர்களின் பதில்மொழியையும் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, நாமும் நற்செய்தியை எடுத்துச் சென்று அனைத்து இடங்களிலும், அதாவது, எவ்வித எதிர்ப்புக்கும் இடையிலும் அறிவிக்க வேண்டும், ஏனெனில், மனிதர்கள் வாழும் இடங்கள் எல்லாம் நற்செய்தி எனும் விதைக்கு ஏற்ற இடங்களே எனக் கூறினார்.

தன் மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 25ம் தேதி, தான் புனித பவுல் பசிலிக்காவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் பங்கெடுக்க உள்ளதைப் பற்றி குறிப்பிட்டதோடு, இத்தாலியின் Abruzzo, Marche மற்றும் Lazio பகுதிகளில் நில நடுக்கத்தாலும், பனிப்பொழிவாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செப உறுதியையும் வழங்கினார்.

இம்மாதம் 28ம் தேதி பிறக்கவிருக்கும் சீனப் புத்தாண்டிற்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.