2017-01-21 15:31:00

முறையான, திருமண அருளடையாளத் தயாரிப்புகள் அவசியம்


சன.21,2017. நாம் வாழும் இக்காலத்தில், திருமணம் செய்து வாழ்வதற்கு, துணிச்சல் மிகவும் தேவைப்படுவதால், திருமண வாழ்வில் நுழையும் இளம் தம்பதியருடன், அன்பு மற்றும் பிற, தெளிவான செயல்கள் வழியாக, திருஅவை, எப்போதும் மிக நெருக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ரோமன் ரோட்டா எனப்படும், கத்தோலிக்கத் திருஅவையின் திருமணம் சார்ந்த உச்ச நீதிமன்றத்தின் புதிய ஆண்டை, இச்சனிக்கிழமையன்று, தொடங்கி வைத்து  அதன் பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளம் தம்பதியரின், ஆன்மீக மற்றும் குடும்ப வாழ்வில், கிறிஸ்தவ சமூகம், உறுதுணையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

விசுவாசத்திற்கும், திருமணத்திற்கும் இடையேயுள்ள உறவையும், திருமணம் பற்றி, திருத்தந்தையர் புனித 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரும் கூறியுள்ள ஆழமான கருத்துக்களையும் குறிப்பிட்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் கிறிஸ்தவத் திருமணங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு, இரு தீர்வுகளை வழங்கினார்.

திருமணம் மற்றும் குடும்ப வாழ்வை, இறைவனின் திட்டத்திற்கு ஒத்திணங்கும் வகையில் கண்டுணரும் நோக்கத்தில், தகுந்த திருமணத் தயாரிப்புகள் இடம்பெறுவது முதல் தீர்வு என விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், திருமணத்தின் உண்மைத் தன்மையை அறிந்து, வாழ்வதற்கு உதவுவதாகவும், இத்தயாரிப்புகள் இருக்க வேண்டுமெனக் கூறினார்.

இளம் தம்பதியர், திருமணத்திற்குப் பின்னர், திருஅவையிலும், விசுவாசத்திலும் தொடர்ந்து பயணம் செய்வதற்கு உதவுவது, இரண்டாவது தீர்வு எனத் தெரிவித்த திருத்தந்தை, இறைமக்களுக்கு ஆற்றும் இப்பணியைச் செய்வோரை, தூய ஆவியார் வழிநடத்துகிறார், எனவே துணிச்சலை இழக்க வேண்டாமென, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இறைவனின் உண்மைக்குத் திறந்த உள்ளம் கொண்டவர்களாய் வாழும்போது, உண்மையான திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு பற்றிப் புரிந்துகொள்ள இயலும் என்றும், அன்புக்கும், உண்மைக்கும் இடையேயுள்ள உறவு ஆழப்படுத்தப்பட வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, சமய விழுமியங்களும், விசுவாசமும் இல்லாத திருமணங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், எடுத்துச் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.