2017-01-21 15:38:00

அமெரிக்க புதிய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை வாழ்த்து


சன.21,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில், புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு, இறைவன் ஞானத்தையும், வல்லமையையும் வழங்கவேண்டுமென்று தான் செபிப்பதாக, தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 20, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், டிரம்ப் அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள், அமெரிக்க மக்களின் வரலாற்றை வடிவமைத்துள்ள, வளமையான, ஆன்மீக மற்றும் நன்னெறி விழுமியங்களால் வழிநடத்தப்படும், என்ற தனது நம்பிக்கையையும், குறிப்பிட்டுள்ளார்.

மனித சமுதாயம், கடும் மனிதாபிமான நெருக்கடிகளால் சூழ்ந்துள்ள இக்காலத்திற்கு, தொலைநோக்குப் பார்வையும், ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன எனவும், கூறியுள்ள திருத்தந்தை, ஏழைகள் மற்றும், நம் கதவுக்கு முன் நிற்கும் இலாசரைப் போன்ற தேவையில் இருப்போருக்கு, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் தலைமையில், அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

இன்னும், நியூ யார்க் கர்தினால் திமோத்தி டோலன் அவர்களும், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு, தனது நல்வாழ்த்தையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் துணை அரசுத்தலைவராக, மைக் பென்ஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.