2017-01-20 14:52:00

தன்னலப்போக்கை கைவிடுமாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு


சன.20,2017. கண்டனம் செய்வதற்கு மட்டுமே தெரிந்த சட்டவல்லுனர்களின் தன்னலம் நிறைந்த மனப்போக்கை, கிறிஸ்தவர்கள் விலக்கி வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றியத் திருப்பலியில், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வெள்ளிக்கிழமை திருப்பலியின் முதல் வாசகமான, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதியிலிருந்து (8,6-13), மறையுரைச் சிந்தனைகளை வழங்கியத் திருத்தந்தை, கடவுள், இயேசு கிறிஸ்துவில், நம்மோடு செய்துகொண்டுள்ள புதிய உடன்படிக்கை, நம் இதயத்தைப் புதுப்பிக்கின்றது என்று கூறினார்.

எல்லாவற்றிலும், வெளித்தோற்றத்தில் தெரிவதை மட்டுமல்ல, அவற்றின் மூல ஆதாரங்களிலிருந்து கடவுள் புதுப்பிக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் திருச்சட்டம், வெளித்தோற்றத்தில் செயல்படுவது அல்ல, ஆனால், இது, இதயத்தினுள் நுழைந்து, நம் மனப்போக்கை மாற்றுகின்றது என்று கூறினார்.

ஆண்டவரின் திருச்சட்டம், நம் இதயத்தை, நம் உணர்வுகளை, நாம் செயல்படும்முறையை மாற்றுகின்றது மற்றும், காரியங்களை, வித்தியாசமாய் நோக்கச் செய்கின்றது என்றும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார் மற்றும், புதிய உடன்படிக்கை, நம் வாழ்வை மாற்றுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த உடன்படிக்கைக்கு, என்றும் உண்மையுள்ளவர்களாய் வாழுமாறும், விசுவாசிகளை, தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.