2017-01-20 15:12:00

குடியேற்றதாரர் விவகாரத்தில், வரலாற்றிலிருந்து பாடம் கற்க..


சன.20,2017. குடியேற்றதாரர் விவகாரத்தில், வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று, ஓர் உலக பொருளாதார மாநாட்டில் கூறினார், திருப்பீடச் செயலர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற, உலக பொருளாதார மாநாட்டில், இவ்வியாழனன்று உரையாற்றிய, கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐரோப்பாவுக்கு குடியேற்றதாரர் வருவது, புதிய நிகழ்வு அல்ல எனினும், இக்காலத்தில் இடம்பெறும் இந்நிகழ்வு, ஒரு வரலாறு என்று கூறினார்.

சில ஐரோப்பியர்கள், குடியேற்றதாரர் வருகையைக் கண்டு, தங்களின் தனித்துவத்தை இழந்துவிடுவோமோ என அஞ்சி, சோர்வான மனநிலையில் வாழ்கின்றனர் என்றுரைத்த, கர்தினால் பரோலின் அவர்கள், கலாச்சாரங்களுக்கு இடையே நிகழும் சந்திப்பு, உலக வரலாற்றின் முகத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.

அமைதிக்கும், நாடுகள் மற்றும், சமூகங்களுக்கு இடையே பாலங்களைக் கட்டுவதற்கும், குறிப்பாக, சமய சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கவும், திருப்பீடம் தொடர்ந்து உழைத்து வருகிறது என்றும், உலக மாநாட்டில் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், உலகினரின் அனைத்து நடவடிக்கைகளிலும், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டுமென்று, திருப்பீடம் விரும்புவதாகவும் கூறினார்.

தாவோஸ் நகரில், சனவரி 17, இச்செவ்வாயன்று தொடங்கிய உலக பொருளாதார மாநாடு, சனவரி 20, இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.