2017-01-19 15:36:00

திருத்தந்தை - கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு போராட்டம்


சன.19,2017. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு போராட்டம், இதைக்கண்டு பயந்து, எளிதான, தவறான வழியைத் தேடும் சோதனைக்கு நாம் இடம் தரக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இயேசுவைச் சூழ்ந்திருந்த பெரும் கூட்டத்தைப் பற்றிக் கூறும் இவ்வியாழன் நற்செய்தியை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

இயேசுவைச் சூழ்ந்துவந்த மக்கள், இயல்பாகவே அவர் பால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் என்றும், கூட்டம் சேர்ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவிடம் காணப்பட்ட உண்மை அதிகாரம், மக்களை அவரிடம் அழைத்து வந்தது என்று குறிப்பிட்டார்.

தன்னைச் சுற்றி வந்த மக்கள் கூட்டம், இயேசுவையும் அவர்கள் பக்கம் ஈர்த்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஆயனற்ற ஆடுகளைப்போல் மக்கள் இருந்தது, இயேசுவை அவர்கள் பக்கம் ஈர்த்தது என்று கூறினார்.

இயேசுவைக் கண்ட தீய ஆவிகள், "இறைமகன் நீரே" என்று கத்தியதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசுவை இறைமகன் என்று அறிக்கையிடுவது மட்டும் போதாது, அவரைப் பின்பற்றவும் துணியவேண்டும் என்றும், இதுவே, கிறிஸ்தவ வாழ்வு நமக்குத் தரும் போராட்டம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.