2017-01-18 16:05:00

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு - இத்தாலியின் அடிப்படை பண்புகள்


சன.18,2017. வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இத்தாலி நாட்டு பாரம்பரியத்தின் அடிப்படை பண்புகளாக விளங்குவது நமக்குப் பெருமை அளிக்கிறது என்று புனித பேதுரு பசிலிக்காவின் தலைமை அருள் பணியாளரான கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்கள் கூறினார்.

சனவரி 17, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித வனத்து அந்தோனியாரின் திருநாளையொட்டி, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டோருக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் சிறப்பு திருப்பலியாற்றிய கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பல்வேறு துரித முன்னேற்றங்களைக் காணும் இன்றைய தலைமுறையில், பாரம்பரிய தொழில்களான வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மறைந்து வரும் ஆபத்து கூடிவருகிறது என்று, கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள் கவலையை வெளியிட்டார்.

வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் குடும்பம் சார்ந்த தொழில்கள் என்பதால், அந்த பாரம்பரியத்தில், குடும்ப உறவுகளும் பெரிதும் வளர்க்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள், எக்காரணம் கொண்டும் குடும்ப உறவுகளை நாம் இழந்துவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

புனித அந்தோனியார் திருநாளையொட்டி, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கால்நடைகளின் அணிவகுப்பும், அவற்றை அருள்பணியாளர்கள் மந்திரிப்பதும் நடைபெற்று வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.