2017-01-18 14:55:00

பாசமுள்ள பார்வையில்...... அன்னையின் அர்த்தம் மாறிவருவதேன்?


அன்னை என்பது பெருமைக்குரிய ஒரு சொல். அதனால்தான், தன் சொந்த அன்னை இல்லையென்றாலும், மரியாதைக்கும் மாண்புக்கும் உரியவர்களையும், உரியவைகளையும்கூட அன்னை என அழைப்பதுண்டு. இறைவன் மனிதருக்கு அளித்த மிக உன்னத உறவு, அன்னை எனும் உறவாகும். அந்த உன்னத உறவின் மேன்மை எங்கெங்கு பிரதிபலிக்கக் காண்கிறாரோ, அங்கெல்லாம் அன்னை என்ற பதத்தை நிலை நிறுத்துகிறார் மனிதர். புனித அன்னை தெரேசா அவர்களில், இறைவனின் குழந்தைகளுக்கான தியாக மனதைக் கண்டபோது, அன்னை என அழைத்தார் மனிதர். அன்னையரின் பொறுமையை பூமியில் கண்டபோது, அன்னை பூமி என்றார். ஆனால், இன்றைய உலகில் புதுப் புது பெயர்கள், புதுப் புதுச் செயல்கள் புகுந்து மனிதரின் வளர்ச்சியை கீழ் நோக்கிக் காட்டுகின்றன. 'வாடகைத் தாய்' என்றொரு பதம். இது மட்டுமல்ல, பெற்ற சிசுவை, குப்பையில் வீசிவிட்டுச் செல்லும் கல்நெஞ்சு தாய்கள். கருவறைகளைக் கல்லறைகளாக மாற்றும் தாய்கள். பெண் சிசுக்களை அழிக்கும் தாய்கள்.

தாயைத் தெய்வமாக மதிக்கும் ஒரு நாட்டில், இத்தகைய நிலைகள் எங்கிருந்து, எதனால் புகுந்தன? நுகர்வுக் கலாச்சாரம் நம்மை இவ்வளவு தூரம் அடிமைப்படுத்தியதன் காரணம் என்ன? அமர்ந்திருந்து சிந்திக்க வேண்டிய நேரமிது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.