2017-01-18 15:29:00

திருத்தந்தை - செபத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு


சன.18,2017. இப்புதன், உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் திருத்தந்தையின் மறைக்கல்வி உரை துவங்கியது. இந்நிகழ்வு,  இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரம் 10.25 மணிக்கு உரோம் நகருக்கு 111 கிலோ மீட்டர் தொலைவில் இடம்பெற்ற நில அதிர்ச்சியின் பாதிப்பு, அதாவது நில அசைவு, உரோம் நகரிலும் உணரப்பட்டது. கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையில், இவ்வாரம், யோனாவின் வாழ்வு சம்பவத்தை வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! கடவுளால் தனக்கு வழங்கப்பட்ட கடினமான பணியிலிருந்து தப்பியோட முயன்ற, இறைவாக்கினர் யோனாவின் வரலாற்றை, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று நோக்குவோம். கடலில் கடுங்காற்று வீசி, பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டபோது, பிற கடவுள்களில் நம்பிக்கை கொண்ட கப்பல் மாலுமிகள், யோனாவிடம் வந்து, 'நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றார்கள். இந்த நிகழ்வானது, நமக்கு, செபம் மற்றும் நம்பிக்கைக்கு இடையேயான தொடர்பை நினைவுபடுத்தி நிற்கின்றது. மரணத்தை நாம் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது, பெரும்பாலும் நம்முடைய இயலாமையை நாம் ஏற்றுக்கொண்டு, நம் மீட்புக்காகச் செபிக்க வேண்டியதன் தேவையை உணர்கிறோம். கப்பல் மாலுமிகளுக்காகச் செபிக்கும் இறைவாக்கினர் யோனா, தன் இறைவாக்குப் பணியை மீண்டும் ஏற்றுக்கொள்வதுடன், அவர்களுக்காகத் தன் உயிரைக் கையளிக்கவும் தயாராகிறார். இதன் பயனாக, மாலுமிகள் அனைவரும் உண்மைக் கடவுளை ஏற்றுக் கொள்கின்றனர். இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பு எனும் பாஸ்கா மறையுண்மை, நமக்குத் தெளிவாக எடுத்துரைப்பதுபோல், மரணம்கூட நம் ஒவ்வொருவருக்கும், நம்பிக்கைக்கும், நம் மீட்பின் இறைவனுடன் கொள்ளும் செப சந்திப்பிற்குமான அழைப்பாகவும் இருக்க முடியும்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று துவங்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் பற்றிக் குறிப்பிட்டார். நம்பிக்கை உணர்வுடனும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் ஏற்கனவே பெற்றுள்ள முன்னேற்றங்களுக்கான நன்றியுடனும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகத் தொடர்ந்து செபிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.